Facebook Twitter RSS

ஹோம்ஸினுள் நுழைந்தனர் ஹிஸ்புல்லாக்களும் சிரிய படையினரும்

சிரியாவில் கடந்த ஒரு மாத யுத்தத்தின் பின் நேற்று ஹொம்ஸ் நகரமும் ராணுவத்திடம்
 வீழ்ந்தது. ரஷ்யா மற்றும் ஈரானின் பின்னணி உதவிகளுடன் யுத்தம் புரிந்துவரும்,
 சிரியா ராணுவம், மிக முக்கிய வெற்றி ஒன்றை பெற்றிருக்கிறது. தற்போது ராணுவத்தால்
 கைப்பற்றப்பட்டுள்ள ஹொம்ஸ் நகரம்தான், சிரியா அரசுக்கு எதிரான போராட்டங்கள் 
ஆரம்பிக்கப்பட்ட இடம். போராளி அமைப்பினர் இந்த நகரை ‘சுதந்திரத்தின் தொடக்கம்’
 என்று அழைத்து வந்தனர்.
முற்றுமுழுதாக போராளிப் படையினருக்கு ஆதரவான, அவர்களது பலம் பொருந்திய
 இந்த நகரத்தை கைப்பற்றியிருப்பதாக சிரியா நேற்றிரவு அறிவித்தது.

சிரியா ராணுவத்துடன், ஹிஸ்பொல்லா இயக்க படையும் இணைந்து தாக்குதல்
 நடத்தியதில், ஹொம்ஸ் நகரைக் கைவிட்டு பின்வாங்கியுள்ளனர் போராளிப் படையினர்.
 அமெரிக்காவும், வேறு சில அரபு நாடுகளும் போராளிப் படையினருக்கு ஆயுதங்கள் 
கொடுத்தும், தமது கட்டுப்பாட்டில் இருந்த ஹொம்ஸ் நகரை தக்க வைக்க முடியாத நிலை
 போராளிப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு, சிரியா ராணுவமும், ஹிஸ்பொல்லாவும் இணைந்து அல்-குசைர் 
என்ற நகரைக் கைப்பற்றின. அந்த வெற்றியின் பின் அடுத்த இலக்கு ஹொம்ஸ் 
நகரம்தான் என பரவலாக ஊகிக்கப்பட்டது. அல்-குசைரை கைப்பற்றிய பாணியிலேயே, 
சிரியா ராணுவமும், ஹிஸ்பொல்லாவும் இணைந்து ஹொம்ஸ் மீது தாக்குதலை நடத்தின.
எப்படி நடந்தது இந்த யுத்தம்?

கடந்த ஒரு மாத காலமாகவே ஹொம்ஸ் நகருக்கு செல்லும் பாதைகளை துண்டிக்க
 தொடங்கியிருந்தது ராணுவம். போராளி அமைப்பினர் போக்குவரத்துக்கு பயன்படுத்திய
 சிறிய வீதிகள்கூட ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு, காவலரண்கள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, போராளி அமைப்பினருக்கு ஆயுதங்கள் போய்ச் சேர்வது தடுக்கப்பட்டது. 
ஆயுதங்கள் மட்டுமல்ல, உணவுப் பொருட்கள்கூட ஹொம்ஸ் நகருக்கு செல்வதை தடுத்தனர்
 ராணுவம்.

அதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை, தரை தாக்குதல்கள் ஆரம்பமாகின. பீரங்கித் 
தாக்குதல்களும், ராக்கெட் தாக்குதல்களும் நகரை நோக்கி நடத்தப்பட்டன. ஹொம்ஸ் 
நகரை தெற்கேயிருந்து சிரியா ராணுவம் முற்றுகையிட்டது. மேற்கே இருப்பது லெபனான்.
 அங்கிருந்து வந்தன ஹிஸ்பொல்லா படைகள்.

தெற்கு மற்றும் மேற்கில் இருந்து குண்டுகள் மழையாக பொழியத் தொடங்கின.
அதையடுத்து, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை), விமான குண்டு வீச்சு தொடங்கியது.

ஹொம்ஸ் நகரில் போராளி அமைப்பினரின் ஃபாரூக் பிரிகேட் என்ற படையணி இருந்தது.

நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் விடிவதற்கு முன், போராளிப் படையினர்
 வடக்கு திசையில் பின்வாங்கத் தொடங்கினர்.
வடக்கே உள்ள பெரிய நகரமான அலிபோ, இன்னமும் போராளிப் படையினரின்
 கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால், அங்கிருந்து ஹொம்ஸூக்கு உதவிகள் வராதபடி,
 அலிபோ மீதும் விமானத் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

சிரியா விமானப்படையின் விமானங்கள் அலிபோ நகர் மீது தாக்குதல் நடத்துவதற்கு
 பறந்து செல்லும்போது, துருக்கி நாட்டு எல்லைக்கு மிக சமீபமாக பறக்க வேண்டியிருக்கும்
 ஆனால், அப்படி பறந்து சென்று குண்டு வீசியபோது, துருக்கி விமானப்படை அந்த
 விமானங்களை இடைமறிக்க முயற்சிக்கவில்லை.

சிரியா – துருக்கி எல்லையில் நேட்டோ படையினரின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 
உள்ளன. அவையும், இந்த விமானங்களை நோக்கி ஏவப்படவில்லை. (அவை 
இயக்கப்படுவதற்கு துருக்கி அனுமதிக்கவில்லை என்கிறார்கள்)

இதையடுத்து போராளிப் படையினர் தமது ஜீப்களிலும், பிக்கப் வாகனங்களிலும்,
 ஆயுதங்கள் சகிதம் ஹொம்ஸ் நகரைக் கைவிட்டு தப்பிச் செல்வது நேற்று அதிகாலை
 முதல் நடந்தது. காலை சுமார் 10 மணியளவில், சிரியா ராணுவம், ஹிஸ்பொல்லா 
படையினரின் டாங்கிகள் நகருக்குள் பிரவேசித்தன.

நகரின் முக்கிய இடங்களில் காவலரண்களை அமைத்தார்கள். போராளிப் படையைச்
 சேர்ந்த யாராவது நகருக்குள் மறைந்துள்ளார்களா என்ற தேடுதல் வேட்டை நடந்தது.
 அதன்பின், ஹொம்ஸ் நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டது என்ற அறிவிப்பு, சிரியா
 அரசு தொலைக்காட்சியில் வெளியானது.

சில தினங்களுக்கு முன்னரே, ஹொம்ஸ் நகரத்தில் நிலைமை மோசம் என்று அமெரிக்காவும், 
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளும் புரிந்து வைத்திருந்தன. அதையடுத்தே சில 
தினங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஹிஸ்பொல்லா இயக்கத்தை ‘பயங்கரவாத
கருப்பு பட்டியலில்’ சேர்ப்பதாக அறிவித்தன.

சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இருந்து ஹிஸ்பொல்லா விலகிக் கொண்டால்,
 ‘பயங்கரவாத கருப்பு பட்டியலில்’ இருந்து அந்த இயக்கத்தின் பெயர் நீக்கப்படும் 
என மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஹிஸ்பொல்லா, இந்த ராஜதந்திர அழுத்தம் பற்றி கவலை கொள்ளாமல்,
 சிரியா ராணுவத்துடன் இணைந்து யுத்தம் புரிந்து, ஹொம்ஸ் நகரை கைப்பற்ற 
உதவியுள்ளது.

சிரியா ராணுவத்தின் அடுத்த இலக்கு அனேகமான அலிபோ நகரமாக இருக்கும்!


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: