Facebook Twitter RSS

மேலப்பாளையத்தில் கைதானவர்கள் அப்பாவிகள் - மனித உரிமைகள் நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு NCHRO அறிக்கை!



நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கைதான 5 முஸ்லிமகளும் அப்பாவிகள் என்று உண்மை நிலையை அறியும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான NCHRO அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து NCHROவின் தமிழ் மாநில செயலாளர் வழக்கறிஞர் S.M.A.ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது:
"திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 27/7/2013 அன்று 17 கிலோ எடையுள்ள 131 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 141 மின் டெட்டனேட்டர்கள் மற்றும் 2 ஜெல் பாக்கெட் மற்றும் 2 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இவ்வழக்கில் 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தினசரிகளில் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. இது சம்பந்தமான உண்மைகளை கண்டறிய NCHROவின் தமிழ் மாநில செயலாளர் வழக்கறிஞர் S.M.A.ஜின்னா, விடுதலை சட்ட மையத்தின் நிறுவனர், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் A.ராஜா, NCHROவின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் N.M.ஷாஜஹான், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் M.K.நஜிமுத்தீன், வழக்கறிஞர் A.S.அப்துல் காதர், வழக்கறிஞர் M.M.அப்பாஸ், வழக்கறிஞர் A.G.முஹம்மது ஷஃபி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு முடிவு செய்து கடந்த 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய தேதிகளில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வீடுகள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பங்களாப்பா நகர் 1வது தெரு அலி ஃபாத்து என்பரின் வீடு மற்றும் இவ்வழக்கில் முதல் கைது நடைபெற்றதாக சொல்லப்படும் இடமான மேலப்பாளையம் ரிலையன்ஸ் பெட்ரோல் பல்க் இடத்தை நேரில் பார்வையிட்டும் வழக்கின் ஆவணங்களை பார்வையிட்டும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது தாசின், சாகுல் ஹமீது (எ) கட்ட சாகுல், குட்டி (எ) நூருல் ஹமீது ஆகியோர்களை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் நேரில் சந்தித்தும் மற்ற இரண்டு நபர்களான முஹம்மது சம்சுத்தீன், அன்வர் பிஸ்மி ஆகியோர்களை நாங்குநேரி பார்ஸ்டல் பள்ளியில் நேரில் சந்தித்தும் மேலும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரி CBCID ஆய்வாளர் திரு.பிறைச்சந்திரனை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு, அனுமதி தராததால் செல் பேசியில் தொடர்பும்கொண்டது.
மேற்படி வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை குற்ற எண் 1/2013 ன் படி கீழ்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புகார்தாரரான திருப்பூர் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜன் என்பவர் 27.7.2013 அன்று CBCID அலுவலகத்தில் இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி அலுவலகத்தில் இருக்கும் பொழுது சுமார் 20.30 மணியளவில் ஒரு தனியறிக்கை கொடுத்ததாகாவும் அந்த தனி அறிக்கையில் கடந்த 27.7.2013 அன்று இரவு 19.30 மணியளவில் திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் J.நாகராஜன் மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலிஸ் பார்ட்டியுடன் சேலம் மாநகர அஸ்தம்பட்டி காவல்நிலைய குற்ற எண் 297/13 U/S, 302 IPC வழக்கின் சிறப்பு அலுவலாக சென்னை CBCID உயர் அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு மேலப்பாளையம் பகுதியில் விசாரணையில் இருக்கும் போது மேலப்பாளையம் சரகம் எல்லையில் வெடி பொருட்கள் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததாகவும் அதன் பேரில் மேலப்பாளையம் தெற்கு பைப்பாஸ் ரோட்டில் விளக்கு பக்கம் ரிலையன்ஸ் பெட்ரோல் பல்க் பக்கம் போலிஸ் பார்ட்டியுடன் வரும் போது சந்தேகப்படும்படியாக இருந்த இரு நபர்கள் போலிஸ் பார்ட்டியை பார்த்தவுடம் ஓட எத்தனித்ததாகவும் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்த போது முதல் நபர் மேலப்பாளையம் ஹாமீம் புரத்தை சார்ந்த கௌஸ் மைதீன் மகன் முஹம்மது தாசிம் மற்றும் இரண்டாவது நபர் வடக்கு தைக்கா தெருவை சார்ந்த மஸ்தான் மகன் சாகுல் ஹமீது (எ) கட்டை சாகுல் ஹமீது என்று சொன்னார்கள் என்றும் முஹம்மது தாசிம் தன் கையில் துணிப்பை வைத்திருந்தார் என்றும் துணிப்பையில் என்ன உள்ளது என்று புகார்தாரர் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் சொன்னதாகவும், சந்தேகத்தின் பேரில் பையை சோதனை செய்த போது அதில் இரண்டு எலெக்ட்ரிக் டெட்டனேட்டரும் இரண்டு பாக்கட் ஜெல்லும் இருந்தது என்றும் உடன் விசாரித்தபோது தனக்கு கிச்சான் புகாரியின் நெருங்கிய நண்பரான பறவை பாதுஷாவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் தனக்கு ஒரு அட்டை பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைத்துக்கொள் என்றும் இப்பெட்டியில் அதிக சக்திவாய்ந்த வெடிபொருள் உள்ளது என்றும் இது நம் முஸ்லிம் சகோதரர்கள் பல நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் பல கொடுமைகள் அனுபவித்து வருகிறார்கள் என்றும் அதனால் அரசிற்கு பாடம் புகட்டுவதற்காகவும் நாட்டின் சட்ட ஒழுங்கை சீர் குழைத்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி மத கலவரத்தை தூண்டவும் பொது ஜன அமைதியை சீர்குழைப்பதற்காக தேவைப்படும் என்றும் எப்பொழுது செயல்படுத்த வேண்டும் என்பதை நான் சொல்வேன் அப்போது செயல் படுத்தலாம் என்று கூறினான் என்று கூறப்பட்டுள்ளதிலிருந்து மேற்படி முதல் தகவல் அறிக்கை ஏற்கனவே முன்திட்டமிடப்பட்டு ஒரு சில குறிப்பிட்ட காவல் அதிகாரிகளால் சில அப்பாவிகளை குற்றவாளியாக நிர்ணயம் செய்து சட்டப்படி எவ்வித விசாரணையும் நடத்துவதற்கு முன்பே சம்பவ இடமான ரிலையன்ஸ் பல்க்கிற்கு அருகாமையில் உள்ள மேலப்பாளையம் போலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் CBCID போலிஸாரால் மேற்படி முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக தெரியவருகிறது.
இவ்வழக்கு சம்பந்தமாக தினசரி நாளிதழ்கள் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்கள் வாயிலாக இவ்வழக்கில் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அதில் 3 நபர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் 2 நபர்கள் நான்குநேரி பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் அறிந்து பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு சென்று முஹம்மது தாசின், கட்ட சாகுல் மற்றும் நூருல் ஹமீது ஆகியோரை விசாரித்ததில் மேற்படி முஹம்மது தாசின் மற்றும் கட்ட சாகுல் ஆகிய இருவரும் தங்களுக்கும் இவ்வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தாங்கள் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக உதவி செய்து வரும் Charitable Trust For Minorities (CTM) அறக்கட்டளைக்காக பணம் வசூல் செய்து சிறைவாசிகளின் விடுதலைகாக பணியாற்றியதை முடக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் இவ்வழக்கின் புகார் தாரர் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இதற்கு முன் பணியாற்றிய போது தங்கள் மீது பொய் வழக்கு போட்டதாகவும், மேலும் மேலப்பாளையத்தில் பல்வேறு சிவில் வழக்குகளில் மேற்படி ராமகிருஷ்ணன் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததை தாங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போனதால் தங்கள் மீது முன்விரோதம் கொண்டிருந்ததாகவும், தற்போதைய தமிழக அரசியல் சூழலை பயன்படுத்தியும், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை மீட்பதற்காகவும் அவர்களின் மறுவாழ்விற்காக சட்ட ரீதியான பணிகளில் ஈடுபட்டிருக்கும் CTM தொண்டு நிறுவனத்தின் பணிகளை முடக்குவதற்காகவும் மேற்படி CTM தொண்டு நிறுவனத்திற்காக தாங்கள் நிதி திரட்டி வருவதை தடுப்பதற்காகவும் தங்களை கடந்த 27.7.2013 அன்று காலை சுமார் 11 மணியளவில் மேற்படி தாசினும் அவரது நண்பர் தடியன் பசீரும் இரு சக்கர வாகனத்தில் இகூM வசூலுக்கு சென்று திரும்பிய போது குறிச்சி ரயில்வே கேட் அருகே வைத்து தங்களது இருசக்கர வாகனத்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து மேற்படி ராமகிருஷ்ணன் மற்றும் நாகராஜன் தங்களை வழுக்கட்டாயமாக சீவலப்பேரி காவல்நிலையம் கொண்டுசென்றதாகவும் மேற்படி காவல்நிலையத்தில் வைத்து கட்ட சாகுலை அலைபேசி மூலம் அலைக்க முஹம்மது தாசினை வற்புறுத்தியதாகவும் அதற்கு தாசின் மறுப்பு தெரிவிக்கவே பின்னர் தடியன் பசீர் அலைபேசி எண்:- 9787004672 லிருந்து கட்ட சாகுலை அழைத்துள்ளனர்.
அங்கு வைத்து தடியன் பசீரிடம் நீ இவ்வளவு நாள் ஒழுங்காகத்தானே இருந்தாய் ஏன் திடீரென்று CTMக்கு வசூல் செய்கிறாய் என்றும் நீங்கள் வசூல் செய்யும் பணத்தை சிறைவாசிகளுக்குத்தான் செலவு செய்கிறீர்கள் என்பது எங்களுக்கு எப்படி தெரியும் என்றும் அப்பணத்தை வைத்து நீங்கள் ஆயுதங்கள் வாங்கக்கூடும் என்றும் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அதற்கு பசீர் நாங்கள் யாரிடம் வசூல் செய்கிறோம் யாருக்கு கொடுக்கிறோம் என்ற கணக்கு வழக்குகள் எங்களிடம் உள்ளது வேண்டுமென்றால் அதனை சமர்ப்பிக்கின்றோம் என்று கூறியுள்ளார். பின்னர் நீங்கள் வசூல் செய்வதை முடக்க வேண்டும் என்பதற்காகவே எங்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி நீங்கள் வெளியில் இருந்தால் சிறைவாசிகளை வெளியில் எடுப்பீர்கள் இதனால் எங்களுக்கு பெரும் தலைவலி அதனால் நீங்கள் சிறையில் இருப்பது தான் நல்லது என்று கூறி பின்னர் தங்களை பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், தடியன் பசீரை மட்டும் அழைத்து இதற்கு முன் நீ ஒழுங்காக இருந்ததால் உன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கிறோம் ஆனால் இனி நீ CTMற்கு வசூல் செய்தால் இன்னும் மூன்று வழக்குகள் தயாராக உள்ளது மற்றும் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் சேர்த்து விடுவோம் என்று மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு பின்னர் தடியன் பசீரின் ஜீ5 செல்போனையும் அதிலிருந்த சிம் கார்டு எண்:- 9787004672யை வங்கிக்கொண்டு பசீரை அனுப்பி விட்டதாகவும் கூறினர். மேலும் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் தங்களை போன்று மேலப்பாளையத்தை சார்ந்த பிஸ்மி, சம்சுத்தீன், நூருல்ஹமீது ஆகியோர்களையும் அழைத்துவந்து அவர்களையும் இவ்வழக்கில் சேர்த்து காவல் அடைப்பிற்கு அனுப்பியதாகவும் மேற்படி காவல் அடைப்பின் போது நீதித்துறை நடுவரிடம் முஹம்மது தாசின் தன்னிடம் எழுதாத வெள்ளை பேப்பரில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் தனக்கு இவ்வழக்கு சம்பந்தமாக ஒன்றும் தெரியாது என்றும் கூறியுள்ளார். முஹம்மது தாசின் நீதித்துறை நடுவரிடம் புகார் கூறும்போது மேற்படி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மேலும் புகார் கூற முடியாதவாறு தனது பூட்ஸ்காலை வைத்து தாசினின் காலை மிதித்துள்ளார். பின்னர் வெளியே வந்ததும் மேற்படி ராமகிருஷ்ணன் தாசினை பார்த்து நீ எப்படி புகார் கொடுக்கலாம் உன்னை கஷ்டடியில் எடுத்து தொங்கவிட்டு தோலை உரித்து பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கின்றேன் பார் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் மேற்படி பாளையங்கோட்டை சிறையில் உள்ள நூருல்ஹமீதை விசாரித்தபோது அவர் மேற்படி தாசின் மற்றும் கட்ட சாகுலை தெரியாது என்றும் பறவை பாதுஷா இரண்டு மாத்திற்கு முன் தன்னிடம் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை கொடுத்ததாகவும் அதை தன்னுடைய வீட்டில் வைத்திருந்ததாகவும் பின்பு அதை தன்னுடைய நண்பர் சம்சுதீனிடம் கொடுத்ததாகவும் ஆனால் மேற்படி ராமகிருஷ்ணனும், நாகராஜனும் தன்னை வற்புறுத்தி மேற்படி அட்டைப் பெட்டியில் வெடிமருந்து இருந்ததாகதான் யார் கேட்டாலும் கூற வேண்டும் என்று மிரட்டியதாக கூறினார். பின்னர் நான்குநேரி இளஞ்சிறார் சீர்திருத்தப் பள்ளியிலுள்ள பிஸ்மி மற்றும் சம்சுதீன் ஆகியோர்களை பார்த்து விசாரித்த போது நூருல் ஹமீது தன்னிடம் புத்தகம் அடங்கிய சிறு அட்டை பெட்டி கொடுத்ததாகவும் அதை பிஸ்மியிடம் கொடுத்து வைத்திருக்க சொன்னதாகவும் அதை பிஸ்மி அலிபாத்து என்ற 70 வயது மூதாட்டி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஆனால் மேற்படி ராமகிருஷ்ணன் மற்றும் நாகராஜன் அதில் வெடிபொருட்கள் இருந்ததாக கூறவேண்டும் என்று சொல்லி அடித்து அச்சுறுத்தியதாகவும் கூறினர் இதையே பிஸ்மியும் தன்னுடைய விசாரணையின் போது கூறினார். அதன் பின்பு மேற்படி அட்டைப்பெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் அலிபாத்தை சந்தித்து கேட்ட போது பிஸ்மி ஒரு அட்டைப்பெட்டி கொண்டுவந்து தனது வீட்டு பரனியில் வைத்ததாகவும் அதில் என்ன இருந்தது என்பது எனக்கு தெரியது என்றும் மேற்படி அட்டைப்பெட்டியாவது எளிதில் தூக்கக்கூடியது என்றும் சாதாரணமாக தூக்கும் படி இருந்தது என்றும் கூறினார். மேலும் தன்னுடைய வீட்டில் இருந்து தனது அசல் குடும்ப அட்டையையும், ஜுபிட்டர் சிட் ஃபன்ட் அட்டையையும் மேற்படி போலிஸார் எடுத்துச் சென்று இதுநாள் வரை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது தாசின் மனைவி யூசுப் சுலைஹா என்பவரை சந்தித்து விசாரித்ததில் மேற்படி ராமகிருஷ்ணன், நாகராஜன் தலைமையில் வந்த போஸிஸ் டீம் சர்ச் என்ற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து எவ்வித நீதிமன்ற உத்தரவுமில்லாமல் வீடுகளை அலங்கோலம் செய்தனர் என்றும் வீட்டில் இருந்த பீரோவில் இருந்து துணிமணிகள் மற்றும் இதர பொருட்களை அள்ளி வெளியில் வீசினர் என்றும் குழந்தைகளின் மருந்து பாட்டில்களை கூட எடுத்து உடைத்தனர் என்றும் கூறினார். மேலும் தனது வீட்டில் இருந்த CTMன் பில் புக்குகளை எடுத்து சென்றனர் என்றும் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உன் புருஷன் CTMற்காக வசூல் செய்கிறானா? அவன் வெளியில் இருந்தால் தானே வசூல் செய்வான் இனி அவன் எப்படி வெளியில் வருவான் பார்ப்போம் என்று மிரட்டிச் சென்றதாக கூறினார். மேலும் பிஸ்மி என்பவரின் தாயார் சேவம்மாளை சந்தித்து விசாரித்த போது எனது மகனிற்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் ஆனால் எனது மகனை போலிஸார் மிரட்டி வெடிமருந்து வைத்திருந்ததாக ஒத்துக்கொள்ளுமாறு அடித்து மிரட்டியுள்ளனர் என்றும் உண்மையில் அந்த அட்டைப்பெட்டியில் வெடிபொருட்கள் இருந்திருந்தால் அந்த பெட்டியை மக்கள் மத்தியில் பிரித்து காட்டி இருக்கலாம் என்றும் போலிஸார் வந்து அட்டைபெட்டியை எடுக்கும் போது ஜமாத்தார்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் கூடியிருந்தனர். அவர்கள் பெட்டியில் உள்ளதை திறந்து காண்பிக்க சொன்னபோது போலிஸ் அதனை மறைத்து யாருக்கும் காட்டாமல் சாதரணமாக தூக்கி சென்றுள்ளனர் என்றும் மேலும் மற்ற நபர்களுடைய வீடுகளில் விசாரித்ததிலும் இவ்வழக்கு பொய் வழக்கு என்றும் உண்மையில் வெடிபொருட்கள் அந்த பெட்டியில் இருந்திருந்தால் அதனை பிரித்து காட்டி இருப்பர் என்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கவே போலிஸ் போட்ட நாடகம் என்றும் கூறினர். மேலும் இது சம்பந்தமாக எழும்பியுள்ள சந்தேகங்களை கேட்பதற்காக இவ்வழக்கின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரனை நேரில் சந்திப்பதற்காக அவரிடம் நேரம் கேட்டு அவரது செல்பேசிக்கு தொடர்பு கொண்டதற்கு, வழக்கு விசாரணையில் உள்ளது நேரில் எதுவும் கூற இயலாது என்று கூறி நேரில் சந்திக்க மறுத்து விட்டார். மேலும் எத்தனை கிலோ வெடிமருந்துகள் இவ்வழக்கில் கைப்பற்றினீர்கள் எங்கு வைத்து கைப்பற்றப்பட்டது போன்ற எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மேற்கண்ட எங்களது உண்மை கண்டறியும் குழு இவ்வழக்கின் நீதிமன்ற ஆவணங்களையும், தினசரியில் வெளிவந்த செய்திகளையும் இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் 27.7.2013 க்கு முன் தினசரி மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகள், கட்டுரைகள் ஆகியவைகளையும், கைதிசெய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்களின் வாக்கு மூலங்களையும், பொதுமக்களின் சந்தேகக்கேள்விகளையும், விசாரணை அதிகாரியின் பேச்சுக்களையும் கவனமாக பரிசீலனை செய்ததில் கடந்த 24.7.2013 அன்று வெளிவந்துள்ள நக்கீரன் வார இதழ் பக்கம் எண் 7-ல் “வெடிகுண்டுகளுடன் திரியும் மத வெறியர்கள்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது அதில் “ நம்மிடம் பேசிய ஒரு தனிப்படை அதிகாரி இந்த மூவர் டீம் ரொம்பவும் டேஞ்சரஸ் டீம், பெங்களூரு குண்டுவெடிப்புக்கு முன் பக்ருதீன் 17 கிலோ வெடிமருந்தை வாங்கி இருக்கிறான் இதில் 2 கிலோ மருந்தை பெங்களூர் ஆபரேஷனுக்கு பயன்படுத்திவிட்டு மீதமுள்ள 15 கிலோ வெடிமருந்துகளில் ஒரு பகுதியை பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது” என்று கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டுரை 24.7.2013 அன்று வெளிவந்துள்ள சூழ்நிலையில் கடந்த 27.7.2013 அன்று 17 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இவ்வழக்கு பதியப்பட்டதிலிருந்து இவ்வழக்கு திட்டமிட்டே காவல்துறையால் ஜோடிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. 15 கிலோ வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது எப்படி அந்த தனிப்படை அதிகாரிக்கு தெரிந்தது என்றும் சொல்லிவைத்தாற்போல் 17 கிலோ வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறியிருப்பதும் புரியாத புதிராக இருந்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றவர்களையும், ஏனைய முஸ்லிம் சிறைவாசிகளையும் சட்டப்படி மேல்முறையீடு செய்து வெளியில் கொண்டுவருவதற்காக பணியாற்றிவரும் CTM அறக்கட்டளையை சேர்ந்தவர்களை முடக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தினாலயே CTM அமைப்பிற்காக ரமலான் மாதத்தில் முஸ்லிம்களிடம் ஜகாத் என்னும் ஏழை வரியை வசூல் செய்து வரும் CTM யை சேந்த முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து அவர்கள் மீது இவ்வழக்கை பொய்யாக ஜோடித்து, முஸ்லிம்கள் கருப்பு சட்டம் என்று கூறிவரும் UAPA சட்டத்தையும் இவ்வழக்கில் புகுத்தி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு போலிஸாரால் முன்கூட்டியே திட்டமிட்டு பொய்யாக புனையப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட காரணங்கள் மூலம் அறியமுடிகின்றது:
முஹம்மது தாசின் மற்றும் தடியன் பசீர் ஆகியோரை அவர்கள் CTMற்காக வசூல் செய்துவிட்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் வரும் போது குறிச்சி ரயில்வே கேட் அருகில் வழிமறித்து வழுக்கட்டாயமாக ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் நாகராஜன் போலிஸ் டீமால் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் தடியன் பசீர் செல்பேசி எண் 9787004672 என்ற எண்ணில் இருந்து கட்ட சாகுலை தொடர்பு கொண்டு கட்ட சாகுலையும் கைது செய்துள்ளனர். பின்னர் தடியன் பசீரை மட்டும் மிரட்டிவிட்டு விடுவித்துள்ளனர். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் மேற்படி ஆய்வாளர் நாகராஜனும், ராமகிருஷ்ணனும் போலிஸ் பார்ட்டியுடன் ரிலையன்ஸ் பெட்ரோல் பல்க் பக்கம் வரும் போது அந்த இடத்தில் சந்தேகப்படும் படி நின்றுகொண்டிருந்த இரு நபர்களை அவர்கள் கண்டவுடன் ஓட எத்தனித்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்த போது முதல் நபர் தான் முஹம்மது தாசின் என்றும் இரண்டாவது நபர் கட்ட சாகுல் என்றும் தங்களது பெயர் விவரங்களை கூறியதாக ஒரு கட்டுக்கதையை கூறுகின்றனர். மேலும் அவர்களை விசாரித்ததில் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொய்யாக ஒரு வழக்கை ஜோடித்துள்ளனர். இதனை மேலப்பாளையத்தில் உள்ள பல்வேறு சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
 சமீக காலங்களில் இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களில் சிலவகை சொந்தப்பிரச்சனை என்றும் சிலவற்றில் பாதிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகளும் ஓரே மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் தமிழக காவல்துறை தலைவர் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ள சூழ்நிலையில், சேலம் மாநகர அஸ்தம்பட்டி காவல்நிலைய குற்ற எண் 297/13 சட்ட பிரிவு 302 இ.த.ச. வழக்கின் சிறப்பு அலுவலாக மேலப்பாளையம் பகுதியில் வழக்கின் விசாரணையில் இருக்கும் போது மேலப்பாளையம் காவல் நிலைய எல்கையில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததாகவும் அதன் பேரில் மேலப்பாளையம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் சென்று இவ்வழக்கின் குற்றவாளிகளை கைது செய்து வெடிபொருட்களை கைப்பற்றியதாக கூறியுள்ளனர். மேலப்பாளையத்தில் காவல்நிலையம் இருக்கும் போதும் மேலப்பாளையத்திலும் நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு காவல்பிரிவுகளும், உளவு பிரிவுகளும் இயங்கி வரும் சூழ்நிலையிலும், நெல்லை மாவட்ட கமிஷனர், டெபிட்டி கமிஷனர், அஸிஸ்டன்ட் கமிஷனர்கள் என்று ஒரு பெரிய போலிஸ் படையே இயங்கி வரும் சூழ்நிலையில் மேற்படி வெடிபொருட்கள் மேலப்பாளையத்தில் வைத்திருப்பதாக கூறப்படும் அந்த ரகசிய தகவலானது மேற்சொன்ன நெல்லை மாவட்ட போலிஸார்களுக்கு தெரிவிக்கப்படாமல், சேலம் மாவட்ட அஸ்தம்பட்டி காவல்நிலையம் குற்ற எண் 297/13 பிரிவு 302 இ.த.ச வழக்கு விசாரணைக்காக வந்த மேற்படி திருப்பூர் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜன் மற்றும் சிவகங்கை மாவட்டம் காவல்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணனுக்கும் ரகசிய தகவல் கிடைத்ததாக கூறி வழக்கு பதிவு செய்திருப்பதிலிருந்தே இவ்வழக்கு திட்டமிட்டு பொய்யாக மேற்படி அதிகாரிகளால் புனையப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது.
 மேற்படி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணனும், நாகராஜனும் மேலப்பாளையத்தில் முன்பு ஆய்வாளராக பணியாற்றிய போது பல்வேறு சிவில் பிரச்சனைகளில் தலையிட்டு கட்டபஞ்சாயத்து செய்தும் பல்வேறு சட்டத்துக்கு புரம்பான செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் எதிர்த்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துவந்துள்ளனர். இதனால் முன்விரோதம் கொண்டு மேற்படி ஆய்வாளர்கள் திட்டமிட்டு ஒரு கட்டுக்கதையை தயாரித்து வெடிகுண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்.
 வெடிபொருட்கள் இருந்ததாக கூறி அலிபாத்து என்பவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட அட்டைப்பெட்டி என்பது எளிதில் தூக்க முடிந்த சிறிய அட்டைப் பெட்டியாகும் அதனை அலிபாத்து வீட்டில் இருந்து ஒரு கையில் ஒரு போலிஸ் ஒரு புத்தகத்தை கொண்டுபோவது போல எடுத்துச் சென்றுள்ளார். 17 கிலோ வெடிமருந்து அடங்கிய ஒரு பெட்டியை சாதாரணமாக ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வது போல் செல்ல இயலாது. மேலும் உண்மையில் வெடிபொருட்கள் இருந்திருந்தால் பெரிய நகரமான மேலப்பாளையம் நகர பொது ஜமாத்தார்களிடம் அதனை காண்பித்திருக்கலாம் அல்லது பத்திரிக்கையாளர்களிடமாவது அப்பெட்டியை திறந்து காண்பித்திருக்கலாம். இப்படி மூடி மறைத்ததிலிருந்தும், வெயிட் இல்லாத காத்துப்போன்ற பெட்டிய கைப்பற்றிவிட்டு 17 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறுவதில் இருந்தும் இது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பது புலப்படுகின்றது.
 பெங்களூர் மல்லேஸ்வரம் பி.ஜே.பி அலுவகம் அருகில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் எவ்வித தொடர்பும் இல்லாத CTM அறக்கட்டளையை சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை பொய்யாக இணைத்து கர்நாடக போலிஸிடம் பிடித்துக் கொடுத்த தமிழக SIT பிரிவினர், மிச்சமீதமுள்ள CTMயை சார்ந்த நபர்களை இயங்க விடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்துடன் CTM ஐ சார்ந்த இளைஞர்களை இவ்வழக்கில் பொய்யாக இணைத்து ஒரு வெடிகுண்டு நாடகம் நடத்தி CTM அறக்கட்டளையை முடக்கும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பது இதன்மூலம் புலப்படுகின்றது.
கடந்த 27.7.2013 அன்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்களையும், கைது செய்யப்பட்ட பின்னர் மிரட்டி விடுவிக்கப்பட்ட தடியன் பசீரையும் பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு விசாரணை அதிகாரி, சி.சி.பி. பிரிவு ஏ.சி. திரு.ஓம்கரையா நேரில் வந்து பார்த்து மிரட்டிச் சென்றுள்ளார். இதிலிருந்து கர்நாடகா போலிஸும், தமிழக போலிஸும் இணைந்து அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வேட்டையாடி வருவது தெளிவாக தெரிகின்றது. மேற்படி ஓம்கரையா ஏற்கனவே பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரி மற்றும் CTMஐ சார்ந்த மற்ற இளைஞர்களையும் அடித்து தலைகீழாக தொங்க விட்டு, எலெக்ட்ரிக் ஷாக்கெல்லாம் கொடுத்து சித்தரவதை செய்துள்ளது பல்வேறு மனுக்கள் மூலம் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் எவ்வித சம்பந்தமும் இல்லாத இவ்வழக்கில் ஓம்கரையா வந்து மிரட்டி சென்றுள்ளது மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த 2004ஆம் வருடம் கோவை உளவுத்துறை உதவி ஆணையாளர் ரத்தினசபாபதி வெடிகுண்டை தானே தயார் செய்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பழிபோட்டார். பின்னர் அது நேர்மையான விசாரணை அதிகாரியான ADSP பாலன் என்பவரால் விசாரிக்கப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட்டது. பின்னர் பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பிற்கு பின்னர் கடந்த 16.5.2013 அன்று கேவை மேற்கு சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையாளர் ராமச்சந்திரன் தலைமையில் தமிழக மற்றும் கர்நாடகா போலிஸார் இணைந்து அவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்காசி சுலைமான், ஒழுங்கோ சுலைமான் ஆகியோரின் வீட்டிற்கு சென்று போலிஸ் கொண்டுசென்ற பிளாஸ்டிக் டப்பா வெடிமருந்துகளை அவர்கள் வீட்டில் வைத்து எடுத்துவிட்டு வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக கட்டுக்கதை கட்டினர். இது சம்பந்தமாக கோவையில் உள்ள முஸ்லிம்களின் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட காவல் ஆணையாளரை சந்தித்து முறையீடு செய்த போது மேற்படி கைதிகளின் வீடுகளில் எவ்வித வெடிமருந்துகளும் கைப்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் பெங்களூர் காவல்துறை ஆணையாளர் தனது பத்திரிக்கை பேட்டியில் பெங்களூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் கோவை வீடுகளில் 600 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளார். இச்சூழ்நிலையில் வெடிப்பொருட்களை வைத்து கடந்த 27.7.2013 அன்று மேலப்பாளையத்தில் ஒரு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகத்திற்கிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், மறுவாழ்விற்காகவும் பணியாற்றிவரும் CTM அறக்கட்டளையை முடக்கும் எண்ணத்துடன் தமிழக போலிஸாரும், கர்நாடகா போலிஸாரும் இணைந்து போட்டுள்ள பொய் வழக்குகளான பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு குற்ற எண் 118/13 வழக்கையும், மேலப்பாளையம் CBCID குற்ற எண் 1/13 வழக்கையும் மத்திய புலனாய்வு குழுவிற்கு (CID க்கு) மாற்றி உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், பாரபட்சமற்ற விசாரணை நடைபெறவும் ஆவண செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை இக்குழு கேட்டுக்கொள்கின்றது"
இவ்வாறு  NCHRO அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: