Facebook Twitter RSS

இரசாயன தாக்குதல் போலிக்காரணத்துடன், சிரியா மீதான இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிறது!!!

போலிக்காரணமாக புதனன்று குற்றஞ்சாட்டப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தாக்குதலை பயன்படுத்தி, அமெரிக்காவும் கூட்டு இராணுவ சக்திகளும் சிரியாவிற்கு எதிராக நேரடித் தாக்குதலுக்கான பல தொடர்ந்த விருப்பத் தேர்வுகளை அமெரிக்க அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். நகர்த்தப்பட்டுள்ள இராணுவத் தயாரிப்புக்களானது புதன் நிகழ்வுகள் மற்றொரு நவ-காலனித்துவப் போரை மத்திய கிழக்கில் நடத்த நியாயப்படுத்தும் ஆத்திரமூட்டலின் ஒரு பகுதிதான் என்பதைக் காட்டுகின்றன.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்றப் போரில் நேரடி அமெரிக்கத் தலையீடு என்னும் பெருகிய அச்சுறுத்தலானது, ஜனாதிபதி ஒபாமாவால் வெள்ளியன்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது, CNN க்குக் கொடுத்த பேட்டி ஒன்றை அவர் பயன்படுத்தி, அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல் ஒன்றிற்கு சட்டபூர்வ மறைப்பு வடிவம் கிடைக்க சர்வதேச ஆதரவைத் திரட்ட முற்பட்டார்.


வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் முதல் பக்கக் கட்டுரை ஒன்றில் பென்டகன், வெளிவிவகாரச் செயலகம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளில் உள்ள மூத்த அதிகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகளை வியாழனன்று மூன்றரை மணி நேரம் சந்தித்து, எடுக்க வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசினர் என்ற தகவலைக் கொடுத்துள்ளது. நேரடி அமெரிக்க நடவடிக்கையை வரவிருக்கும் நாட்களில் ஆரம்பிப்பது குறித்த உட்கருத்து வேறுபாடுகளால் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்பதாக இக்கட்டுரை பெயரிடாத அதிகாரிகளை மேற்கோளிட்டுள்ளது.

டைம்ஸ் கருத்துப்படி, மத்தியதரைக் கடலில் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல்களிலிருந்து க்ரூஸ் ஏவுகணை தாக்குதல் மூலம் முழு விமானப் போரை நடத்தி குடிமக்களையும் இராணுவத் தளங்களையும் தாக்குவது குறித்த இராணுவ விருப்பத் தேர்வுகள் விவாதிக்கப்பட்டன. செய்தித்தாள் எழுதுவதாவது: “இலக்குகள்  இரசாயன வெடிப் பொருட்களையும், நரம்பு மண்டல தாக்குதல் வாயு ஆயுங்களையும் ஏவுகின்ற  ஏவுகணை அல்லது டாங்குகள் தொகுப்புக்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்; இதைத்தவிர தொடர்புச் சாதனங்கள், ஆதரவு வசதிகளும் இலக்கு கொள்ளப்பட வேண்டும். அசாத் அரசாங்கத்தின் அதிகார அடையாளங்களான தலைமையகம், அரசாங்க அலுவலகங்கள் ஆகியவைகள் இலக்கு வைக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

முதற்பக்கக் கட்டுரையில் பென்டகன் வியாழனன்று “சிரிய அரசாங்கம் மற்றும் இராணுவ அமைப்புக்கள் மீது வான் தாக்குதல்களை நடத்த இலக்குப் பட்டியலை புதிப்பித்துக் கொண்டிருக்கிறது.... இது ஜனாதிபதி பாரக் ஒபாமா செயற்படுத்த முடிவெடுத்துள்ள நிச்சயமற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்ற தகவலைக் கொடுத்துள்ளது.

செய்தித்தாள் தொடர்கிறது: “அமெரிக்க இராணுவ விருப்பத் தேர்வுகளில் ‘ஆட்சி மீதான இலக்குகளான’ போர் முயற்சிக்கு சிரிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முக்கியமானவற்றை தாக்குவதாக இருக்கும். இதைத்தவிர, விருப்பத் தேர்வுகளில் சிரிய இராணுவ “அளிப்புத் திறன்கள் மற்றும் அமைப்புமுறைகள்” மீதான தாக்குதல், நச்சு வாயுவை கொண்டு நேரடியாக தாக்குபவை அல்லது அதற்கு வசதியளிப்பவை, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளிலிருந்து முன்னணி டாங்குத் தொகுப்புக்கள் வரை அமையும் என அதிகாரிகள் கூறினர்.”

பிற விருப்பத் தேர்வுகள் எனப்படுபவற்றில் “செயலற்ற நிலையாக்குவதற்கான” தாக்குதல்கள், அமெரிக்க விமானங்களை சிரிய வானில் அனுப்பத் தேவையில்லை, ஏவுகணைத் தாக்குதல்கள் என இந்த ஆண்டு இஸ்ரேலால் ஏவப்பட்ட சிரிய இலக்குகளுக்கு எதிராக இருந்தவை போல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

“இந்த விருப்பத் தேர்வுகள் இராணுவ அதிகாரிகளினாலும் நயப்படுத்தப்படுகின்றன” என்று ஜேர்னல் கூறியுள்ளது. “இதையொட்டி திரு ஒபாமா ஒரு சிறு உத்தரவின்பேரில் திரு அசாத்தின் படைகள் இரசாயனத் தாக்குல்களை நடத்தினார் என்ற முடிவெடுத்துக் கொடுத்தாலோ, அல்லது திரு ஒபாமா படைகளால் எதிர்கொள்ள விரும்பினாலும் சரி.” 

நேரடி அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்புக்கள், அரசாங்கமும் செய்தி ஊடகமும் இன்னும் ஆதாரமற்ற தகவல்களான, தாக்குதல் இரசாயன ஆயுதங்களால் டமாஸ்கஸுக்குக் கிழக்கேயுள்ள சிறு நகர்களில் நடைபெற்றது என்ற பெரும் பிரச்சாரங்களுக்கு இடையே வந்துள்ளன; அவைகள் சிரிய ஆட்சி மீது போர்க் குற்றங்களை சுமத்தவும், ஏகாதிபத்திய தலைமையிலான குறுங்குழுவாதாப் போர் விரிவாக்கப்பட்டு ஏற்கனவே பேரழிவிற்கு உட்பட்டுள்ள நாட்டை இன்னும் அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.


தாக்குதல்களில் இறப்பு குறித்த மதிப்பீடுகள், அனைத்தும் எதிர்ப்பு குடிப்படைகள் அல்லது அதிகாரிகள் அல்லது அவற்றிற்கு ஆதரவு தரும் குழுக்களிலிருந்து வருபவை, 130ல் இருந்து 2,000 வரை உள்ளன; ஆனால் சிரிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் எந்தச் சான்றும் அளிக்கப்படவில்லை. சிரிய அரசாங்கம், தான் அத்தகைய பங்கு எதையும் கொள்ளவில்லை என்று மறுக்கிறது.

அமெரிக்க, பிரெஞ்சு அல்லது பிரித்தானிய அதிகாரி எவருமே அல்லது செய்தி ஊடக வர்ணனையாளர் எவருமே இத்தகைய தாக்குதலை இந்த நேரத்தில் நடத்துவதில் சிரிய ஆட்சிக்கு என்ன ஆதாயம் என்றும் விளக்கவில்லை. சமீபத்திய வாரங்களில் சிரிய அரசாங்கம் அமெரிக்க ஆதரவுடைய அமெரிக்க ஆயுதங்களைக் கொண்ட குடிப்படைகளுக்கு, அல் குவேடா தொடர்புடைய அல்-நுஸ்ரா முன்னணி உட்பட, பெரும் இராணுவத் தாக்குதல்களை நடத்திவருகிறது; இந்த வாரம் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை மீட்க ஒரு தாக்குதலையும் தொடங்கியுள்ளது; இவைகள் தற்பொழுது அல்-நுஸ்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

மேலும் முன்னைய இரசாயனத் தாக்குதல் எனக் கூறப்படுபவற்றைப் பற்றி விசாரணை நடத்த அழைத்துள்ள ஒரு ஐ.நா, ஆய்வுக் குழு வந்துள்ள சில நாட்களுக்குள் இரசாயன தாக்குதல் நடக்குமா. ஆட்சி ஏன் தலைநகரிலிருந்து ஒரு சில மைல்களுக்குள் இரசாயனத் தாக்குதலை நடத்த வேண்டும், அதுவும் ஐ.நா. ஆய்வுக் குழு தளம் கொண்டுள்ள இடத்தில்?

“எழுச்சியாளர்கள்” எனக் கூறப்படுவோர், அதுவும் தலைநகருக்கு அருகே தங்கள் புகலிடங்களில் இருந்து விரட்டப்படும் சூழலை எதிர்நோக்குகையில், உள்ளூர் குர்திஸ் போராளிகளுடன் கடுமையான போரில் ஈடுபட்டிருக்கையில், அத்தகைய தூண்டுதலை நடத்த நிறைய காரணங்களைக் கொண்டுள்ளனர். அல் நுஸ்ராவில் உள்ள அல் காயிதா வெறியர்கள் நூற்றுக்கணக்கான குடிமக்களை தங்கள் பிற்போக்குத்தன செயற்பட்டியலை செயல்படுத்த கொல்லும் திறனை நன்கு கொண்டவர்கள்.
எதிர்ப்பு குடிப்படைகள் இராசயன ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகவும் அவற்றைப் பயன்படுத்தத்தயார் என்றும் பெருமை பேசினர்; கடந்த மே மாதம் துருக்கிய செய்தி ஊடகம் சிரிய “எழுச்சியாளர்கள்” சரின் நரம்பு வாயு வைத்திருந்தோர் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலைக் கொடுத்தன. மே மாதமே ஐ.நா. அதிகாரி கார்லா டெல் போன்டே “சரின் மேற்கத்தைய ஆதரவுடைய சக்திகளால் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு வலுவான, உறுதியான ஆதாரங்கள்” உள்ளன என்றார்.

இந்த உண்மைகளையெல்லாம் வெறுமனே ஒபாமா மறைத்து, ஜூன் மாதம் எந்தச் சான்றும் இல்லாமல் அமெரிக்கா சிரிய ஆட்சி இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என்ற முடிவிற்கு வந்தார். இது ஒரு போலிக் காரணமாகப் பயன்படுத்தப்பட்டு, ‘எழுச்சியாளர்கள்’ எனப்படுவோருக்கு அமெரிக்கா நேரடி ஆயுதம் கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை பொறுத்தவரை, சிரியாவில் போர் விரிவாக்கம் என்பது அசாத் ஆட்சியை அது போரில் கவிழ்த்துவிட்டு, வேறு ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவியுள்ளது என்ற பெயரை வாங்கிக் கொடுக்கும். இந்த ஒரு ஆட்சிதான் ஈரானின் ஒரே அரபு நட்பு நாடு. ஈரானிய ஆட்சியை எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தின் சவாலுக்கு இடமற்ற தன்மையை நிறுவ ஒரு தடையாக வாஷிங்டன் கருதுகிறது.

இத்தகைய உண்மையான கணக்கீடுகள்தான் மனித உரிமைகள் மற்றும் குடிமக்களைக் காத்தல் என்னும் பாசாங்குத்தன உளறல்களுக்குப் பின் உள்ளன. சிரியப் போர் விரிவடைந்தால் மற்றொரு ஆதாயம் எகிப்தில் அமெரிக்கா ஆதரவுடைய இராணுவ ஆட்சிக் குழு நடத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாத வெகுஜனக் கொலைகளிலிருந்து பொது மக்கள் கவனம் திசைதிருப்பப்படும் திறனும் உள்ளது. எந்த அமெரிக்க அதிகாரி அல்லது செய்தி ஊடகமோ எகிப்தில் கொலை செய்யப்படும் குடிமக்கள் எதிர்ப்பாளர்களைப் பாதுகாக்கவேண்டும் என்று கோரவில்லை; 

இது அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் இரட்டை வேடத்தைத்தான் நிரூபிக்கிறது, அதுவும் “மனித உரிமைகள்” என்று அது கூறுகையில். இத்தகையவை அமெரிக்கா அகற்ற விரும்பும் ஆட்சிகளுக்குத்தான் பொருந்துகின்றன, அது ஆதரவு கொடுக்கும் ஆட்சிகளுக்கு அல்ல.
வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் செய்தி ஊடகப் பிரச்சாரத்துடன் சேர்ந்து அதன் சிரியப் போர் விரிவாக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு தலையங்கம் எழுதியது: அதில் “டமாஸ்கஸுக்கு வெளியே நடந்த இறப்புக்கள் அசாத் ஆட்சியின் நடவடிக்கை என நிரூபணமானால் அமெரிக்காவும் பிற முக்கிய சக்திகளும் கிட்டத்தட்ட  தங்கள் ஈடுபாட்டை ஆக்கிரோஷமாக இப்போரில் காட்ட வேண்டும்”.

வியாழன் இரவு நடந்து வெள்ளியன்று ஒளிபரப்பப்பட்ட அவருடைய CNN பேட்டியில் ஒபாமா இரசாயனத் தாக்குதல் என்று கூறப்படுவது “பெரும் கவலை அளிக்கும் நிகழ்ச்சியாகும்” என்றார். வாஷிங்டன் கோரிக்கையை அவர் வலியுறுத்தினார். அது அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ், ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ-மூனாலும் எடுக்கப்பட்டுள்ளன; அதன்படி சிரிய அரசாங்கம் ஐ.நா.விசாரணைக் குழுவை சம்பவம் நடந்த பகுதி எனக்கூறப்படும் பகுதிக்கு உடனடியாக அணுக அனுமதிக்க வேண்டும் என்று உள்ளது.

கிழக்கு கூத்தா பகுதி இன்னமும் அல்-நுஸ்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற உண்மையை இக்கோரிக்கை புறக்கணிக்கிறது; இது இராணுவத் தலையீட்டிற்கு ஒரு போலிக் காரணத்தைத் தோற்றுவிக்கும் வடிவமைப்பைக் கொண்டது. ஒபாமா அசாத் ஆட்சியைப் பற்றி சொல்கையில், “அவர்களுடைய பழைய வரலாற்றைப் பார்க்கையில், நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

இக்கோரிக்கைக்கு டமாஸ்கஸ் இணங்குகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும். இது அதனுடைய முக்கிய சர்வதேச நட்பு நாடு ரஷ்யாவினால் வழிமொழியப் பட்டுள்ளது. அசாத் ஒரு பொறி மற்றும் தயாரிப்பு இதில் இருக்கலாம் என அஞ்சுவதற்குக் காரணம் உள்ளது—அதுவும் ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து லிபியா வரை ஒவ்வொரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும் ஐ.நா. அனுமதி கொடுத்த பங்கு இருக்கையில்.
எச்சரிக்கை தேவை என வாதிடுகையில், ஒபாமா நேரடி அமெரிக்கத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதைக் கோடிடும் வகையில் கூறினார்: “அது பின் சில அடிப்படைத் தேசிய நலன்கள் அமெரிக்கா கொண்டுள்ளதை, தாக்குகிறது – பேரழிவு ஆயுதங்கள் பெருகவில்லை, நம் நட்பு நாடுகளையும் பிராந்தியத்தில் நம் தளங்களைக் காப்பதிலும் என்ற இரண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் சிரியா மீது அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல் ஒன்றிற்கு ஆதரவைத் திரட்டும் தன் விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். அதே போல் அத்தகைய நடவடிக்கைக்கு அத்தி இலை மறைப்பு ஒன்று கொடுப்பது குறித்தும் கவலை கொண்டுள்ளார். “அமெரிக்கா மற்றொரு நாட்டை ஐ.நா. அனுமதியின்றி, தெளிவான சான்று இல்லாமல் தாக்கினால்,  சர்வதேசச் சட்டம் அதற்கு ஆதரவு தருமா என்பது குறித்த வினாக்கள் எழும், நம்மிடம் அதைச் செயல்படுத்த ஒரு கூட்டணி உண்டா என்னும் வினாவும் வரும்...”

இதற்கிடையில் போர் முரசு முழக்கம் வெள்ளியன்று அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகளால் முடுக்கப்பட்டது.  ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள், சிரிய இரசாயன ஆயுத இடங்களில் செயற்பாடுகளைக் கண்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது என்றனர். இது புதன் தாக்குதலுக்கு முன்பு ஆகும். பெயரிடப்படாத அதிகாரிகள் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள் இப்பொழுது “சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற முடிவின்பால் சாய்கின்றனர்” எனக் கூறினர்.

பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் தொலைக்காட்சி அறிக்கை ஒன்றில், சிரிய எதிர்ப்பு குறித்த வாய்ப்புக்கள்தான் தாக்குதல் “மறைந்து விட்ட அளவிற்கு சிறிதாக உள்ளன” என்றார். அவர் தொடர்ந்தார்: “இது அசாத் ஆட்சியின் இரசாயனத் தாக்குதல் பெரிய அளவிற்கு இருந்திருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். வருங்காலத்திலும் அது நடைபெறக்கூடும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.”

எதிர்த்தரப்பு நடத்திய தூண்டுதல்தான் இரசாயனத் தாக்குதல் எனக் கூறப்படுவது என்று ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து கூறுகின்றனர். ரஷ்யாவின் லெபனியத் தூதர் அலெக்சாந்தர் ஜாஸிப்கின் உத்தியோகபூர்வ சிரிய செய்தி அமைப்பான SANA வால் அவர் “இரசாயன ஆயுதங்கள் பிரச்சினை ஈராக்கில் நடத்தியது போல் பிற இலக்குகளுக்கு உதவப் பயன்படுத்தப்படக்கூடாது என்று நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி அறிவித்தார்: “இன்னும் புதிய சான்றுகள் இந்தக் குற்றம் தெளிவான தூண்டுதல் என்பதற்கு வெளிப்பட்டுள்ளன.... இணைய தளத்தில் குறிப்பாக தகவல்கள் நிகழ்வு பற்றியவை அரசாங்கத் துருப்புக்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தது எனக் கூறப்பட்டதற்கு சில மணிநேரங்கள் முன்னதாகவே வந்தன. எனவே இது முன்கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கை ஆகும்.”

வெளிப்படையான அமெரிக்க இராணுவத் தாக்குதல் வருவதற்கு முன்னரே, சிரியாவில் நடக்கும் போரில் அமெரிக்க ஈடுபாடு அதிகரித்து வருகிறது. வியாழனன்று யூரோ நியூஸ்.காம் தனி பிரெஞ்சு, இஸ்ரேலிய தகவல்களை மேற்கோளிட்டு ஜோர்தானிய, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கமாண்டோக்கள் நூற்றுக்கணக்கான சிரிய எதிர்ப்பாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் இப்பொழுது டமாஸ்ஸைத் தாக்கும் உந்துதலைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. “தகவல்கள் கிட்டத்தட்ட 300 பேர் ஜோர்டான் எல்லையிலிருந்து சிரியாவிற்குள் ஆகஸ்ட் 17 அன்று கடந்தனர், இரண்டு குழு 19ம் தேதி கடந்தது என்று வலைத் தளம் கூறுகிறது.”

அது தொடர்கிறது: “பகுப்பாய்வாளர்கள் இது அமெரிக்க மூலோபாயத்தின் முதல் கட்டம் என்று கூறுகின்றனர்—பயிற்சி அளித்து தளத்திற்குள் சுதந்திர சிரிய இராணுவத்தின் பொறுக்கி எடுத்த உறுப்பினர்களை அனுப்புதல், ஒரு தெற்கு இடைத்தாங்கல் பகுதியை ஜோர்டான்-இஸ்ரேலிய எல்லையை ஒட்டி நிறுவுதல், அங்கு எழுச்சிப் படைகள் பயிற்சி அளிக்கப்படலாம், தளம் கொள்ளலாம்.”

அமெரிக்கா தூண்டிவிட்டு ஆதரவு கொடுத்துள்ள சிரிய உள்நாட்டு குறுங்குழுவாதப் போர், பிராந்தியம் முழுவதும் குறுங்குழுவாத மோதல்களை தூண்டியுள்ளது. வெள்ளியன்று இரண்டு கார்க் குண்டுகள் வடக்கு லெபனிய நகரமான திரிப்போலியில் வெடித்து 42 பேரைக் கொன்று சில நூறுபேரைக் காயப்படுத்தின. குண்டுகள் சுன்னி மக்களை இலக்கு கொண்டன; லெபனிய ஷியைட் ஆதிக்கமுடைய ஹெஸ்போல்லா இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குண்டுத் தாக்குதல்கள் நடந்தபின் வந்துள்ளன.

இதைத்தவிர, இஸ்ரேலிய போர் விமானங்கள் வெள்ளியன்று பெய்ரூட்டிற்கும் சிடனுக்கும் இடையே “பயங்கரவாதத் தளம்” என்று கூறப்படுவதை தாக்கின. இப்பகுதியில் 2006ம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து முதலாவது இஸ்ரேல் வான் தாக்குதலாகும் 
பெருகும் ஆத்திமுட்டல்கள் மற்றும் அசாத் ஆட்சிக்கு எதிரான போர்த் தயாரிப்புக்கள், மத்திய கிழக்கு முழுவதும் இன்னும் பரந்த, இரத்தம் சிந்தும் போரை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன—அது அமெரிக்காவை ரஷ்யா, சீனாவுடன் நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: