Facebook Twitter RSS

வெலிவேரிய படுகொலைகளுக்குப் பின்னால் அரசியல் செய்தி ஒன்று உள்ளதா? – கீதா பொன்கலன்

     

         கடந்தவாரம்  பால்ச்சோறு சாப்பிடவா, பட்டாசு கொளுத்தவா என்ற அவா எம்மவர் சிலரிடம் தோன்றியிருக்கலாம். அவ்விதமான ஒரு உணர்வு தோன்றியிருக்குமாயின் அது மகா பாதகமாகன ஒரு விடயம் என்று கூறமுடியாது. மனித உணர்வுகள்  பல விடயங்களில்  பலவீனமானவையே. முக்கியமானது   நாம் பட்டாசு  கொளுத்தவும் இல்லை பால் சோறு சாப்பிடவும் இல்லை என்பது. அது மனித செயற்பாட்டின் நாகரிகம்.
முள்ளிவாய்க்காலிலும் அதற்கு சற்று அப்பாலும் எமது மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டபோது தெற்கு செய்ததெல்லாம் இதுவே, வெடி கொளுத்தி, பால்ச் சோறும் கொகிசும் சாப்பிட்டு, பைலா பாட்டடித்தும் அது கொண்டாடப்பட்டது.
அப்போது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் வேதனைப்படுவானே என்ற நாகரிகம் இருக்கவில்லை என்று மட்டுமல்ல ஏன் இன்றும் முள்ளிவாய்க்காலில் அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோபக்குவம் இருக்கவில்லை. எமது ரணவிருவோ அப்படி செய்திருக்க மாட்டார்கள், அவர்கள் அப்படிச் செய்யக்கூடியவர்கள் அல்ல என்று உண்மையாகவும் பொய்யாகவும் சிங்கள பொது மக்கள் நம்பியிருந்தார்கள்.
இன்று வெலிவேரிய  அந்த நம்பிக்கையையும்  கனவையும்  தகர்த்து விட்டுள்ளது. ஏனெனில், என்ன நடந்தது என்பதையும் அதன் விளைவுகளையும் ஓரளவு  நேரடியாகவே  பார்க்கக்கூடியதாக இருந்தது.
வெலிவேரிய தொடர்பில் வெளியிடப்பட்ட பொதுமக்கள் கருத்துகளில் பொதிந்திருந்த ஒருகேள்வி தெற்கில் சிங்கள மக்களுக்கே இந்தக் கதி என்றால் வடக்கில் தமிழர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது. இந்தக் கேள்வி இரு இனக்குழுக்களிலுள்ளிருந்தும்   தோன்றியிருந்தபோதும், தமிழ் மக்கள் அதைக்கேட்டபோது  அதில் ஒரு திருப்தி இருந்திருக்கவில்லை என்று கூறமுடியாது. அதன் கருத்து வெலிவேரியாவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு எமது அனுதாபங்கள் இருக்கவில்லை என்பதல்ல.
வெலிவேரிய சம்பவத்தை தொடர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி தோன்றியுள்ளது போல் தோன்றுகின்றது. அதன் பின்னணியில் நீங்களா? எமக்கா? என்ற கேள்வி மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருப்பினும்  2008யும்  ஒன்பதையும்  உன்னிப்பாக  அவதானித்த மக்களுக்கு அந்த அதிர்ச்சி இருக்கவில்லை. அவர்களுக்கு  இலங்கை அரசியலில் இது சாதாரணமப்பா என்பதுபோல் ஆகிவிட்டது.
இருப்பினும் உண்மையில் ஆச்சரியப்பட வைத்தது என்னவெனில் படுகொலைகளின் பின்னர் அது தொடர்பில் பெரிய ஒரு அனுதாபம் தெரிவிக்கப்படாமையாகும். அவ்வகையில் அரசாங்கததின் உயர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மௌனம்  ஆச்சரியப்பட  வைப்பதாகவே உள்ளது. ஏனெனில், பாதிக்கப்பட்டது  அவர்களது  ஆதரவு தளம். எனவே, அதனை  அரசியல் ரீதியாக கையாள்வதற்கான  ஒரு முயற்சி இருந்திருக்க வேண்டும்.
தெரியாமல் நடந்துவிட்டது, எனக்கு கூறப்படவில்லை என்பது போன்ற சாட்டுக்கள் கூறப்பட்டிருக்கலாம். அவ்விதம் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்ற நட்டஈடு பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை மட்டுப்படுத்திவிடுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்.
சாட்சியமில்லாத யுத்தம் ஒன்றின் அரசியல் பயன்பாடு அரசாங்கத்தைப் பொறுத்தவரை அனுபவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருந்தது. வடக்கில் ஊடகவியலாளர்களும், வெளிநாட்டு ஊழியர்களும், செய்தி கொண்டு போகக் கூடியவர்களும் திட்டமிட்ட முறையில் வெளியேற்றப்பட்டதன் பின்னரே, உண்மையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதே யுக்தி வெலிவேரியவிலும் கடைப்பிடிக்கப்படுவதற்கான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. வெலிவேரிய வன்முறைக்கு முன்னர் அப்பிரதேசத்தில் மின்சாரத்தை தடை செய்வதற்கும், பொருத்தப்பட்டிருந்த  பொது வீடியோ  படக்கருவிகளை சேதப்படுத்துவதற்குமான  விசேடமான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த யுக்தியின் ஒரு பகுதியே ஊடகவியலாளர்களும் அவர்களது கருவிகளும் திட்டமிட்டு தாக்கப்பட்டிருந்தமையாகும். ஆயினும் கடந்த முறை போன்றே பூசணிக்காயை முழுமையாக மறைக்க முடியவில்லை. தவிர்க்க முடியாதபடி காட்சிகளும்  செய்திகளும் வெளியாகி விட்டிருந்தன. இருப்பினும்  இந்தமுறை வித்தியாசம்  என்னவெனில்   எதிர்பார்த்த அளவிற்கு சாட்சி இல்லாமல்   செய்துவிடுகின்ற   வித்தைக்கு          ஊடகவியலாளர்களிடம் இருந்து  போதிய  ஆதரவு  கிடைத்திருக்கவில்லை.
அது அவர்களது  தேசியவாதத்தின்  வெளிப்பாடு. கடந்த தடவை நடப்பது என்ன என்பது தெரிந்தே இருந்தாலும் மனிதாபிமானக் காட்சிகளை மட்டுமே படம்பிடித்துக் காட்டி இருந்தார்கள். அப்போது அரசாங்கத்தைக் காட்டிக் கொடுத்தது “வெற்றிச் சின்ன படங்கள்’ என்று  அழைக்கப்பட்ட  அவர்கள்  பிடித்த படங்களே ஆகும். எனவே, அன்றைய  வன்முறையில்  தென்னிலங்கை  ஊடகங்களும் ஒரு பங்காளி ஆகும்.
இருப்பினும் ஏதாயினும் ஒரு வகையில் உண்மை வெளிவருவது அவசியம். அவ்வகையில் இன்றைய அபிவிருத்திகளை குறை  கூறமுடியாது. இலங்கையை பொறுத்தவரை சாட்சியில்லாமல் செய்துவிடுகின்ற யுக்தி காரியத்தை முடிப்பதற்கு உதவி இருக்கின்றபோதும் உண்மையை மறைக்க உதவியதில்லை.
வெலிவேரிய தொடர்பில் வெளிவந்த புகைப்பட மற்றும் வீடியோ காட்சிகளில் கட்டுரை ஆசிரியரை ஆச்சரியப்பட வைத்தது என்னவெனில்  வெலிவேரிய மக்கள்   இராணுவத்திற்கு எதிராக காட்டிய குரோதம் ஆகும். ஆரம்பத்தில் வெளிவந்த படங்களில் இராணுவத்தினர் கம்புகளினாலும் பொல்லுகளினாலும் தாக்கப்படுகின்ற காட்சி சற்று தீவிரமாகவே இருந்தது.
இது அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திக்கு முன்னர் கொல்லப்பட்ட முதலாவது மாணவனின் இறுதிக் கிரியைகளுக்கு பின்னர் காவலுக்கு நின்ற இராணுவத்திற்கு எதிராக போடப்பட்ட கூக்குரல்களும் தீவிரமாகவே இருந்தன.
இந்த இராணுவத்திற்கா நாம் இரத்த தானம் செய்தோம்? ஆசிவேண்டி மதவழிபாடு செய்தோம் என்று பலரும் கேள்வி எழுப்பியதும் பார்க்கக்கூடியதாய் இருந்தது. “அபே ரணவிருவோ’வுக்கு இது நடைபெற்றது என்பது சற்று ஆச்சரியப்படவைத்ததாகவே இருந்தது.
தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் என்னவெனில் யுத்த காலத்திலும், யுத்த வெற்றியின் பின்னும் சிங்கள மக்களுக்கும் இராணுவத்திற்கும் இருந்த “மயக்கநிலை’ இல்லாமற் போவதன் ஆரம்பமாக இது இருக்கக்கூடும் என்று தோன்றுவதாகும். இந்த இராணுவம்  எமக்காக வேலை  செய்யவில்லை  அல்லது   போராடவில்லை என்ற உணர்வு  தோன்றுகின்றபோதே  இவ்விதமான உணர்வு வெளிப்பாடு சாத்தியமானதாகும்.
இந்த உணர்வு வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவங்களால் மட்டுமே தோன்றியிருக்கும் என்று கூறமுடியாது. அதற்கு அடிப்படையான சில வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். அவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்.  இப்போது  கவனிக்கப்பட  வேண்டியதெல்லாம்  வெலிவேரியவில்  இராணுவத்தின்  மீதான தாக்குதல்  தனித்த ஒரு நிகழ்வா அல்லது தேசிய போக்கின் வெளிப்பாடா என்பது.
ஏனெனில், அதிகரித்த வகையில் இராணுவம் மட்டுமல்ல எல்லா பொது நிறுவனங்களும் சொத்துகளும் ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்துகள் போல் பயன்படுத்தப்படுகின்றன. இது தென்னிலங்கையில் ஒரு எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதா என்பது அவதானிக்கப்பட வேண்டியதாகும்.



வெலி வேரியவில் உண்மையில் இடம்பெற்றது என்ன? வெறுமனே நல்ல தண்ணீர் வேண்டிப் போராடிய வெலிவேரிய மக்களுக்கு எதிராக முழுமையாக ஆயுதம் தரித்த இராணுவத்தினர் ஏன் அனுப்பப்பட்டனர்? சுடுவதற்கும் கொல்வதற்குமான உத்தரவு யாரால்  வழங்கப்பட்டது? வெலிவேரிய சம்பவத்திற்கு  யார் பொறுப்பு? என்ற பல கேள்விகள் இன்று சிங்கள பொது மக்களாலும், புத்திஜீவிகளாலும் அக்கறையுடையோராலும் கேட்கப்படுகின்றன.

இவை கேட்பதற்கு நன்றாக இருந்தபோதிலும் அடிப்படையில் முட்டாள் தனமான கேள்வி என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், கேட்கப்படுகின்ற கேள்விகள் எல்லாவற்றுக்குமான பதில் தெளிவானது. எம்மில் சிலர் மட்டும் ஒன்றும் தெரியாதது போல் நடித்துக் கொண்டுள்ளனர். யார் பொறுப்பு, ஏன் செய்தார்கள் என்பது தெளிவானது.
 
தந்திரோபாயம் என்னவெனில் எதிர்ப்பை முளையிலேயே கிள்ளிவிடுவது. ஏனெனில், ஒரு எதிர்ப்பு அனுமதிக்கப்படுமாயின், அல்லது வெற்றிகரமாக அமைந்துவிடுமாயின், அது பூதாகரமானதாக மாற்றமடைவதற்கும், ஒரு தேசிய பரிமாணத்தை பெற்றுவிடுவதற்குமான  சாத்தியம் ஒன்று உள்ளது.
அராபிய வசந்தம் ஒன்று பற்றி தாம் அச்சப்படவில்லை என்று அரசாங்க உயர் உறுப்பினர்கள் கூறிவந்த போதும் அது பற்றிய ஒரு அக்கறை தொடர்ந்தும் உள்ளது என்பது மறுக்கப்படுவதற்கில்லை. லிபியாவும் எகிப்தும் எமது ஆட்சியாளர்களின் உள்ளுணர்வில் இருக்கவில்லை என்று கூற முடியாது.
எனவே, அரசாங்கத்தின் தந்திரோபாயம் என்னவெனில் எதிர்ப்பை ஆரம்பத்திலேயே தீவிர வன்முறையூடாக கிள்ளிவிட்டால் ஏனையோர் இன்னொரு எதிர்ப்பை முன்னெடுக்க அஞ்சுவார்கள் என்பது ஆகும். இலகுவாகக் கூறுவதாக இருந்தால்  “ஆரம்பத்திலேயே அடித்துவிட வேண்டும்’என்கின்ற சிந்தனை.
இந்த தந்திரோபாயம் செயற்படுத்தப்படுவதை நாம் கட்டுநாயக்காவிலும், சிலாபத்திலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. தீவிரமான போராட்டங்கள் ஆரம்பித்த உடனேயே கட்டுநாயக்காவில் ரொசேன் சாறுகவும் சிலாபத்தில் அந்தோனியும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். எனவே, வெலிவேரியவின் அதில் ஒரு விதிவிலக்கு அல்ல.
அது ஒரு தொடர்ச்சியாகும். இத் தந்திரோபாயம் அரசாங்கத்திற்கு எதிரான தீவிர போராட்டங்களை மட்டுப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பு உண்மையானால் அது எதிர்காலத்திலும் தொடரக்கூடும் என்பதுடன், சிங்கள மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவும் கூட பிரச்சினைக்குரியதாக மாறக்கூடும்.
இதில் உள்ள பிரச்சினை என்னவெனில் இலங்கை மக்கள் குறுகிய ஞாபகசக்தி உள்ளவர்கள் ஆகும். அடுத்த பிரச்சினை ஆரம்பமாகின்றபோது வெலிவேரிய சம்பவம் மறந்துவிடப்படக்கூடும். அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: