Facebook Twitter RSS

மொசாத் உளவாளிகளின் ரகசிய ஹோட்டல் சந்திப்பு மீடியாவில் லீக் ஆனது எப்படி?

  

  இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம் ஒன்று, துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்தது. அங்காராவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்பு ஒன்று ‘எப்படியோ’ மீடியாவுக்கு லீக் ஆன விவகாரம் அது.


சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 11 பேர். இதில் 10 பேர், ஈரானில் ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருந்த உளவாளிகள். இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்காக ஈரானில் பணி புரிந்தவர்கள். 11-வது நபர், இந்த 10 பேரின் மேலதிகாரி. இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ்வில் இருந்து இவர்களை ரகசியமாக சந்திக்க அங்காரா வந்திருந்தார்.
அங்காரா நகர ஹோட்டல் ஒன்றில் இவர்கள் சந்தித்து பேசிக்கொண்டது எப்படியோ, துருக்கி மீடியாவில் போட்டோக்களுடன் வெளியானது. இந்த ரகசிய சந்திப்பு எப்படி லீக் ஆனது என தலையைப் பிய்த்துக் கொண்டது, இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்.

ஈரானுக்குள் உளவு பார்க்க நுழைவது சுலபமல்ல. ஆனால், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் இரண்டுமே தமது உளவாளிகளை அங்கே வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் ஈரானுக்கு உண்டு.

ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் வீதிகளில் ‘மர்ம நபர்களால்’ கொல்லப்பட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபோது, சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் உளவாளிகள் ஈரானுக்குள் இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் உறுதியானது. மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து சுட்டுவிட்டு, மிக எளிதாக தப்பிச் சென்ற ‘மர்ம நபர்கள்’ யாரும் இதுவரை அகப்படவே இல்லை.

தமது அணு விஞ்ஞானிகளை ஒவ்வொருவராக இழந்தபோது, அவர்களை கொன்ற மர்ம நபர்களை எந்த அளவுக்கு வலைவீசித் தேடியிருப்பார்கள் ஈரானிய உளவுத்துறை என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், இன்றைய தேதிவரை யாரும் அகப்படவில்லை.

அதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. முதலாவது, அந்த மர்ம நபர்கள் கைதேர்ந்த உளவாளிகளாக இருக்க வேண்டும். இரண்டாவது, சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஹெல்மெட்டை கழட்டினால், யாராலும் சந்தேகப்பட முடியாத நபர்களாக இருக்க வேண்டும். அதாவது, ஈரானிய அரசு உயரதிகாரிகளாகவோ, ராணுவ தளபதிகளாகவோ, ஏன் விஞ்ஞானிகளாகவோகூட இருக்கலாம்.

அப்படியான விதத்தில் ஈரானுக்குள் ஊடுருவ விடப்பட்ட தமது உளவாளிகளை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் தலைமை, நேரே இஸ்ரேலுக்கு அழைத்து பேச மாட்டார்கள். சந்தேகப்பட முடியாத மற்றொரு நாட்டுக்கு வரச் சொல்வார்கள். தமது மேலதிகாரியை அந்த நாட்டுக்கு அனுப்பி சந்திக்க சொல்வார்கள்.

மொசாத் வைத்திருந்த, ‘சந்தேகப்பட முடியாத மற்றொரு நாடு’ துருக்கி.
ஈரானில் ஊடுருவ விடப்பட்டிருந்த 10 உளவாளிகளை சந்தேகம் ஏற்படாதவாறு துருக்கிக்குள் வரச்செய்து, இஸ்ரேலில் இருந்து மொசாத் மேலதிகாரி ஒருவரையும் துருக்கிக்கு அனுப்பி, இந்த 11 பேரும் சந்தித்து பேசிய விஷயம்தான், மிக சிம்பிளாக துருக்கி மீடியாவில் லீக் செய்யப்பட்டது. அதன்பின் அந்த 10 நபர்களாலும் மீண்டும் ஈரானுக்கு செல்ல முடியவில்லை.

இந்த விவகாரம் எப்படி லீக் செய்யப்பட்டது என்ற விபரம், தற்போது உளவு வட்டாரங்களில் அடிபடுகிறது. துருக்கியின் ‘சர்வ வல்லமை பொருந்திய’ உளவுத்துறை தலைவரின் வேலைதான் இது என்கிறார்கள்.
துருக்கியின் பிரதான உளவுத்துறையின் பெயர், எம்.ஐ.டி. ( MIT – Milli Istihbarat Teskilati). அதன் தற்போதைய தலைவர் ஹக்கன் ஃபிடானின் பெயர் தற்போதெல்லாம் அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்களுடன் நெருக்கமான வாஷிங்டன் போஸ்ட், நியூயார் டைம்ஸ் பத்திரிகைகளில் அதிகம் அடிபடுவதை காணலாம்.

சமீபத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டபோது, வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் விருந்துடன் கூடிய சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி, மற்றும் துணை ஜனாதிபதி கலந்துகொண்ட அந்த சந்திப்புக்கு பிரதமர் எர்டோகனுடன், துருக்கி உளவுப்பிரிவு தலைவர் ஃபிடானும் அழைக்கப்பட்டதில் இருந்து அவரது முக்கியத்துவத்தை வாஷிங்டன் எப்படி கணித்து வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் (மேலேயுள்ள போட்டோவில் இடதுபுறமிருந்து இரண்டாவது நபர் பிரதமர் எர்டோகன், மூன்றாவது நபர், உளவுத்துறை தலைவர் ஃபிடான்)
இவர்தான் துருக்கி ஹோட்டலில் வைத்து மொசாத் உளவாளிகள் நடத்திய சந்திப்பு பற்றிய தகவலை லோக்கல் மீடியாவுக்கு லீக் செய்தவர் என்கிறார்கள், உளவுத்துறை வட்டாரங்களில் என்ன காரணம்? ‘இஸ்ரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை’ என்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அது என்று ஊகிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், தமது ஈரானிய மற்றும் சிரியா ஆபரேஷன்களை நீண்ட காலமாகவே துருக்கியை மையமாக வைத்தே நடத்திக் கொண்டிருக்கிறது. அதாவது, ஈரான் மற்றும் சிரியாவில் செயல்படும் மொசாத் உளவாளிகளுக்கு உத்தரவு போவது, துருக்கியில் மொசாத் மறைமுகமாக இயக்கும் ரகசிய ஆபரேஷன் சென்டரில் இருந்து என்கிறார்கள்.

அத்துடன், சி.ஐ.ஏ. தம் பங்குக்கு துருக்கியில் வைத்து மற்றொரு ரகசிய ஆபரேஷன் செய்கிறது.

சிரியாவுக்குள் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பினருக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுப்பது தற்போது துருக்கி ஊடாக ரகசியமாக தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் சிரியாவுக்கு உள்ளே ஆயுதங்களை ரகசியமாக அனுப்ப சி.ஐ.ஏ. துருக்கி எல்லையை உபயோகிக்க திட்டமிட்டது. இரண்டு விமானங்களில் ஆயுதங்களும் போய் இறங்கின. ஆனால், அந்த ஆபரேஷனை நடத்த துருக்கி அனுமதிக்கவில்லை. அதற்கு ரஷ்யா கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம்.

இதையடுத்து சி.ஐ.ஏ. அந்த ஆயுதங்களை சிரியாவின் மற்றொரு எல்லை நாடான ஜோர்தானுக்கு கொண்டு சென்றது. ஜோர்தான் எல்லை ஊடாக ஆயுத சப்ளை நடந்தது. அதுவரைக்கும் சரி.

ஆனால், ஜோர்தான் எல்லை ஊடாக கொடுக்கப்படும் ஆயுதங்களை போராளி அமைப்பினர், யுத்தம் நடக்கும் அலீபோ மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கு கொண்டுவர முடியவில்லை. அதையடுத்து சி.ஐ.ஏ. ரகசியமாக சில ஆயுதங்களை சிரியாவுக்குள் கொண்டு சென்றது. இந்த வகையில் துருக்கி எல்லை ஊடாக ஒரு ஷிப்மென்ட் ஆயுதங்கள் சிரியாவுக்குள் சென்றன.

துருக்கி அரசுக்கு தெரிவிக்காமல் சி.ஐ.ஏ. செய்த இந்த ரகசிய கடத்தலை, துருக்கி உளவுத்துறை எம்.ஐ.டி., கண்டு பிடித்துவிட்டது.
சி.ஐ.ஏ.வின் இரண்டாவது ஆயுத ஷிப்மென்ட் துருக்கி எல்லைக்கு வந்தபோது, எம்.ஐ.டி. ஒரு தந்திரம் செய்தது. சிரியாவில் இருந்து ஆயுதம் பெற்றுக் கொள்ள வந்த ஆட்களை முதலில் தாங்களே மடக்கிக் கொண்டு, தமது ஆட்களை விட்டு ஆயுதங்களை பெற்றுக் கொண்டது துருக்கி உளவுத்துறை.

அந்த ஆயுதங்கள் சிரியாவுக்கு உள்ளே போய் சேரவில்லை.
சி.ஐ.ஏ. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக ‘கம்’மென்று இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இப்படியான நிலையில்தான், துருக்கி ஹோட்டலில் ரகசிய சந்திப்பு நடத்திய மொசாத் ஆட்கள் பற்றிய தகவல் லீக் செய்யப்பட்டது. இதை, ‘மொசாத்துக்கு ஒரு நேரடி எச்சரிக்கை’ என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது மொசாத்தின் கூட்டாளி சி.ஐ.ஏ.வுக்கு மறைமுக எச்சரிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இது, துருக்கி உளவுத்துறை தலைவர் ஃபிடான் செய்த வேலை என்கிறார்கள்.
ஃபிடான், அமெரிக்க மேரிலேன்ட் பல்கலைக் கழகத்தின் ஐரோப்பிய வளாகத்தில் படித்தவர். அதன்பின் துருக்கி தலைநகர் அங்காராவின் பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயன்ஸில் டாக்டரேட் பெற்றவர். 2003-ம் ஆண்டு துருக்கி வெளியுறவு அமைச்சில் பணியில் சேர்ந்து, 2007-ல், துருக்கி பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் ஆனார். அதுவரை எந்த உளவுத்துறை பின்னணியும் கிடையாது.
திடீரென, 2010-ம் ஆண்டு உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே, துருக்கி உளவுத்துறை வெட்டி விளையாடத் தொடங்கியிருக்கிறது.

துருக்கியிலும், ஈராக்கிலும் அமெரிக்க தூதராக பணிபுரிந்த ஜேம்ஸ் ஜெஃப்ரி, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், “நாங்கள் இதுவரை காலமும் டீல் பண்ணிய மத்திய கிழக்கல்ல, தற்போது உள்ளது. அவர்கள் நிறையவே மாறி விட்டார்கள். துருக்கி உளவுத்துறை தலைவர் ஃபிடான், ‘புதிய மத்திய கிழக்கின்’ முகம்.

எமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், நாம் அவருடன் இணக்கமாக வேலை செய்ய வேண்டும். அவரால் அந்த பிராந்தியத்தில் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை. அவருடன் இணக்கமாக இருந்தால், எமது காரியங்கள் நடக்கும். முறுகிக்கொண்டால், காரியத்தை மறக்க வேண்டியதுதான் என்பது மட்டுமல்ல, எம்மையே பலி வாங்கிவிடும்” என்றார்.

இந்த உண்மையை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், தமது 10 உளவாளிகளின் அடையாளத்தை வெளிப்படுத்திய பின் புரிந்து கொண்டிருக்கலாம்!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: