Facebook Twitter RSS

சினாயினை ஊடறுத்து எகிப்திய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது


கிப்திய ராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடவையாக அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் பலம்வாய்ந்த பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. எகிப்தின் சினாய் பிராந்தியத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த இடம், தீவிரவாதிகள் மறைந்து வாழ பாதுகாப்பான இடம் என்று கருதப்படுகிறது.


சினாய் மத்தியில் உள்ள ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் இதுவரை ராணுவம் நுழைந்ததில்லை. ‘எகிப்தின் தோரா-போரா’ என்று அழைக்கப்படும் ஜபால் அல்-ஹலால் பகுதி, ஆப்கானிஸ்தானின் தோரா-போரா பகுதி போலவே புவியியல் தன்மை கொண்டது. ஆப்கான் தோரா-போரா குகைகளில்தான் பின்-லேடன் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன் மறைந்திருந்தார்.

எகிப்திய ராணுவத்துக்கு எதிராக கெரில்லா தாக்குதல்களில் ஈடுபடும் அல்-காய்தா ஆதரவு சலாஃபி இயக்கம், எகிப்துக்குள் தமது ஆயுத பலம், மற்றும் ஆட்பலத்தை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் வெறும் ஏ.கே.47 எந்திரத் துப்பாக்கிகளுடன் இயங்கிய இவர்களது கைகளில் தற்போது, டாங்கி எதிர்ப்பு பீரங்கிகள், 120mm ஹெவி மோட்டார்கள் என ராணுவத்தின் மீது தாக்கும் அளவிலான ஆயுதங்கள் உள்ளன. கடந்த வாரம் எகிப்திய ராணுவ இலக்குகள் மீது இவர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதல்கள், பலரையும் ஆச்சரியப்பட வைத்தன.
அதுவரை, இந்த அமைப்பினரால் ராணுவத்துக்கு எதிரான ஒரு சம்பிரதாய போரில் ஈடுபட முடியாது என்றே பலரும் நினைத்திருந்தனர். இப்போது அந்த நினைப்பு மாறியுள்ளது.

எகிப்திய ராணுவ தலைமையும், அல்-காய்தா ஆதரவு சலாஃபி இயக்கம் தமக்கு பலத்த அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதை புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான், ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது.
ஜபால் அல்-ஹலால் பகுதியை, ‘எகிப்தின் தோரா-போரா’ என்று சும்மா பேச்சுக்கு பெயர் வைக்கவில்லை. நிஜமாகவே, ஆப்கான் தோரா-போரா போன்ற நில அமைப்பு உள்ள பகுதி. பாலைவனத்தில் பாறைகள் அடங்கிய நிலப்பரப்பில், இடையிடையே அடர்த்தியாக உலர் வலயக் காடுகளும் உள்ளன. அதைவிட ஆப்கான் தோரா-போரா போல இங்கு ஏராளமான குகைகள் உள்ளன.

இந்தக் குகைகளில் மறைந்துகொண்டால் கண்டுபிடிப்பது கஷ்டம். காரணம், பல குகைகளுக்கு இடையே சுரங்கப் பாதைகள் உள்ளன. விமானத் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அட்டகாசமான இடம் இது. அத்துடன், உளவு சாட்டலைட்டுகளின் கண்களில் இருந்து மறைந்து வாழ குகைகள் பாதுகாப்பு கொடுக்கும் இடம் இது.

ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் செல்வதற்கு, சரியான பாதைகள்கூட கிடையாது. இந்தப் பகுதியை நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பாதை கண்டுபிடித்துச் செல்ல முடியும். சுருக்கமாக சொன்னால், ஒரு ராணுவ நகர்வுக்கு உகந்த இடமல்ல இது. ராணுவ கவச வாகனங்கள், டாங்கிகள், மற்றும் கனரக வாகனங்களை கொண்டுசெல்ல முடியாது.

இந்தப் பகுதியில் அல்-காய்தா ஆதரவு இயக்கத்தை சேர்ந்த சுமார் 3,000 பேர் இருக்கலாம் என்பது, எகிப்திய உளவுத்துறையின் கணிப்பு. ராணுவம் நுழைய முடிந்திராத இந்தப் பகுதிக்குள், அல்-காய்தா ஆதரவு இயக்கம் வெவ்வேறு படைப்பிரிவுகளை வைத்திருக்கிறது என்பது மற்றொரு உளவுத் தகவல்

இந்தப் பகுதி மீதான படையெடுப்புக்கு எகிப்திய ராணுவம் கடந்த சில வாரங்களாகவே ஏற்பாடுகளை செய்து வந்தது. அங்கு சென்று தாக்குதல் நடத்த நேற்று எகிப்திய ராணுவம் அப்பகுதிக்கு சென்றுள்ளது என்ற தகவலை, எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அப்தெல்-ஃபாட்டா எல்-சிசி மறுக்கவில்லை.

ஆனால், அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படைப் பிரிவுகள் தொடர்பாக வெளியாகியுள்ள விபரங்களை உறுதி செய்ய மறுத்துவிட்டார்.
“அப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளை தாக்கி முறியடிக்க போதியளவு பலமுள்ள படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. படைப் பிரிவுகள் பற்றிய விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது” என்றார் அவர்.

அவர் தெரிவிக்காவிட்டாலும், ராணுவ வட்டாரங்களில் இந்த விபரங்களை தெரிந்துகொள்ள வழியுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, ஜபால் அல்-ஹலால் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்த எகிப்திய ராணுவத்தின் ஒரு எந்திரமய பிரிகேட் (mechanized brigade), 3 கமாண்டோ படைப்பிரிவுகள், 120mm மோட்டார்களுடன் கூடிய 1 ஆட்டிலரி படைப்பிரிவு ஆகியவை அந்தப் பகுதியை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்களுக்கு ஆகாய சப்போர்ட் கொடுப்பதற்காக, அப்பச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் விமானப்படை படைப்பிரிவு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

மற்றொரு விஷயம், எகிப்திய ராணுவத்தின் இந்த நகர்வுக்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் பல உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அவை எவ்விதமான உளவுத் தகவல்கள் என வெளிப்படையாக கூறப்படவில்லை. பெரும்பாலும், அல்-காய்தாவினரின் பலம், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது சப்ளை ரூட்டுகள் பற்றிய உளவுத் தகவல்களாக இருக்கலாம்.
அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத்துறைகள் சமீப காலங்களில் எகிப்தின் சினாய் பகுதியில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். அதற்கு காரணம், இங்கு மறைந்திருக்கும் அல்-காய்தா சலாஃபி இயக்கத்தினர், டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளை ஓரிரு தடவைகள் சூயஸ் கால்வாயில் சென்ற கப்பல்கள் மீது ஏவியிருந்தனர்.

தரையின் பயன்படுத்தப்படும் அவ்வகை ராக்கெட்டுக்களை, கடல் தாக்குதல்களில் துல்லியமாக பயன்படுத்த முடியாது. அதனால், இவர்களது தாக்குதல்கள் எந்தக் கப்பலையும் இதுவரை பெரியளவில் சேதப்படுத்தவில்லை.

ஆனால் நாளைக்கே இவர்களது கைகளில் கடல் தாக்குதல்களில் பயன்படுத்தக்கூடிய கப்பல் எதிர்ப்பு ராக்கெட்டுகள் கிடைத்தால், சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். அதுதான், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகள் இந்தப் பகுதிமீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. இப்போது இஸ்ரேலிய ராணுவத்துக்கும் உதவ முன்வந்துள்ளார்கள்.

அடுத்த சில தினங்களில், இப்பகுதியில் எகிப்திய ராணுவ தாக்குதல்கள் நடைபெற தொடங்கலாம். ஜபால் அல்-ஹலால் பகுதி, ராணுவத்தைவிட, தீவிரவாத இயக்கங்களுக்கே சாதகமான பகுதி என்பதால், எதிர்த் தாக்குதல்களும் பலமானதாகவே இருக்கும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: