Facebook Twitter RSS

அமெரிக்க அதிரடிப் படை DELTA FORCE வீதியில் நடத்திய ஒரு அதிகாலை ஆள் கடத்தல்!

 
மெரிக்காவால் நீண்ட காலமாக தேடப்பட்டு, ‘தலைக்கு 5 மில்லியன் டாலர்’ பரிசு அறிவிக்கப்பட்டிருந்த தீவிரவாத சந்தேக நபர் அல்-லிப்பி, அதிரடி நடவடிக்கை ஒன்றில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ (Delta Force) கொமாண்டோக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, கார் ஒன்றில் இருந்த அல்-லிப்பியை ‘கடத்தி’ சென்றனர்.


‘கைது செய்தனர்’ என்பதைதான் தவறுதலாக ‘கடத்திச் சென்றனர்’ என எழுதிவிட்டோம் என்று நினைக்கிறீர்களா? இல்லை.

“அல்-லிப்பியை அமெரிக்க கடத்திச் சென்றுவிட்டது” என்று கூறியிருப்பது நாங்கள் அல்ல.. லிபியா அரசு. காரணம், லிபியாவில் வைத்துதான் அல்-லிப்பியை பிடித்தது அமெரிக்க அதிரடிப்படை.
பிடித்த உடனே அவரை, பிரத்தியேக விமானம் ஒன்றின் மூலம் லிபியாவுக்கு வெளியே கொண்டு சென்றும் விட்டார்கள்.
இதற்குமுன் வெளிநாடுகளில் சி.ஐ.ஏ. அதிரடியாக ஆட்களை பிடித்து நாட்டுக்கு வெளியே கொண்டுபோன சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளோம். இம்முறை அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ களத்தில் இறங்கியுள்ளது.
லிபியா தலைநகர் த்ரிபோலியில் வசித்த அல்-லிப்பி, அதிகாலை தொழுகைக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி வந்தார். தமது வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்க முயற்சித்தார். திடீரென அவரது கார் அருகே உரசியபடி கருப்பு நிற பென்ஸ் கார் ஒன்று வந்து நின்றது. சற்று பின், டின்டட் கிளாஸ் போட்ட வேறு வாகனங்களும் சடுதியாக வந்து நின்றன.
இரண்டிலும் இருந்து துப்பாக்கிகளுடன் குதித்த ‘முகமூடி’ நபர்கள், அல்-லிப்பியை காரில் இருந்து இழுத்து வீழ்த்தினார்கள். அவரது தலையில் துணிப்பை ஒன்று போட்டு முகத்தை மறைத்தார்கள். அல்-லிப்பியின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டார்கள். ஆளை குண்டுக் கட்டாக தூக்கி பென்ஸ் காரில் போட்டுக்கொண்டு பறந்து விட்டார்கள்.
அதிகாலையில், விடிந்தும் விடியாததுமான நேரத்தில் இவை அனைத்தும் ஒருசில விநாடிகளில் நடந்துவிட்டது.
அதன் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்க அதிரடிப்படை ‘டெல்ட்டா ஃபோர்ஸ்’ செய்த காரியம் என்று தெரிய வந்தது. இவர்கள் லிபியா அரசுக்கு தெரிந்துதான் வந்தார்களா, அல்லது பாகிஸ்தானில் பின்-லேடனை கொல்வதற்கு வந்ததுபோல ரகசியமாக வந்து இறங்கினார்களா என்பதில் குழப்பம் உள்ளது.

லிபியா அமைச்சர் ஒருவர், “அல்-லிப்பியை அமெரிக்கா கடத்திச் சென்றுவிட்டது. அல்-லிப்பி தீவிரவாத சந்தேக நபராக இருக்கலாம். ஆனால், அவர்மீது குற்றம் நிரூபிக்கப்படுமுன் எமது நாட்டில் இருந்து கடத்திச் சென்றதை கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
லிபியா அரசுக்கு கடத்தல் விவகாரம் முன்கூட்டியே தெரியாது என கூறப்படுவதை, எந்தளவுக்கு உண்மை என்று எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
இந்த அல்-லிப்பியின் நிஜப் பெயர், நாசி அப்துல்ஹமிட் அல்-ருகாயி. அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலில் 2000-ம் ஆண்டில் இருந்து உள்ளார். ஒரு காலத்தில் பின்-லேடனுடன் நேரடித் தொடர்பில் இருந்த நபர் இவர். தற்போது 49 வயது.
1998-ம் ஆண்டு கென்யா தலைநகர் நைரோபியில் இருந்த அமெரிக்க தூதரகம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அதில்247 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலை நடத்துவது தொடர்பான திட்டமிடலை செய்வதற்கு பின்லேடனால் கென்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நபர், இந்த அல்-லிப்பிதான் என்கிறது, அமெரிக்க உளவுத்துறை.
பின்-லேடனால் கென்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அல்-லிப்பி, நைரோபியில் இருந்த அமெரிக்க தூதரகத்தை நோட்டமிட்டு, போட்டோக்களை எடுத்துக் கொண்டார். அதன்பின் தூதரகத்தை தாக்குவது எப்படி என திட்டமிட்டு, செயல்படுத்தினார் என்பது, சி.ஐ.ஏ.வின் குற்றச்சாட்டு.
த்ரிபோலி நகர வீதியில் அதிகாலையில் நடந்த இந்தக் கடத்தலை நேரில் பார்த்தவர்கள் உள்ளார்கள். கடத்தப்பட்ட அல்-லிப்பியின் சகோதரர் நசீர், “அல்-லிப்பியின் மனைவி தமது வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக இந்தக் கடத்தலை பார்த்தார். அல்-லிப்பியை கடத்தியவர்கள், வெளிநாட்டவர்கள் போல தோற்றம் கொண்ட கொமாண்டோக்கள் என அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது மகன் லோக்கல் டி.வி. சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், “அல்-லிப்பியை கடத்தியவர்கள், லிபியாவை சேர்ந்தவர்கள்தான். இரண்டு கார்கள், மற்றும் ஒரு பஸ்ஸில் அவர்கள் வந்தார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் கருப்பு கண்ணாடி போடப்பட்டவை. லைசென்ஸ் பிளேட் ஏதும் கிடையாது. வந்தவர்கள், லிபியா உச்சரிப்புடன் பேசிக் கொண்டார்கள்” என்றார்.
பொதுவாகவே இப்படியான அதிரடி ஆபரேஷனுக்கு வரும் அமெரிக்க அதிரடிப் படையினர், வாய் திறந்து பேசுவதில்லை. தமக்கிடையே சைகைகள் மூலமே பேசிக் கொள்வார்கள். கடத்தல் நடந்து முடிந்த சில விநாடிகளில், லிபியா உச்சரிப்புடன் பேசிக்கொண்டார்கள் என்றால், அது திசைதிருப்பும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.
அல்-லிப்பி கைது செய்யப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அவர் தற்போது லிபியாவில் இல்லை என்றும் தெரிவித்துள்ள அமெரிக்கா, அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை. லிபியாவில் இருந்து எப்படி வெளியே கொண்டு செல்லப்பட்டார் என்ற விபரமும் கூறப்படவில்லை.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: