Facebook Twitter RSS

இஸ்ரேலிற்காக அமெரிக்காவின் சிரியா மீதான படையெடுப்பு - ஜனநாயகத்தின் பொய் முகங்கள்

மெரிக்க அரசாங்கத்தின் பேரழிவு ஆயுதங்கள் (WMD) என்று இல்லாத ஆயுதங்களைப் பற்றிய பொய்களை அடிப்படையாகக் கொண்டு ஈராக் மீது அமெரிக்க அரசாங்கம் போர் தொடுத்து 10 ஆண்டுகளுக்குப்பின், சிரியாவிற்கு எதிரான புதிய ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்த கொடூரத்தில் சற்றும் குறைவற்ற ஆத்திமூட்டல் பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டனால் தயாரிக்கப்படுகிறது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் கடந்த புதனன்று டமாஸ்கஸுக்கு அருகே கூத்தாவில் (Ghouta) பெரும் இரசாயன ஆயுதங்கள் தாக்குதலை நடத்தினார் என்னும் குற்றச்சாட்டுக்களுக்கு எத்தகைய நம்பகத்தன்மையும் கிடையாது.

அசாத் ஆட்சி அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை. புதன் வரை, அதன் படைகள் மெச்சத்தக்க வகையில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தாமலேயே, அமெரிக்க ஆதரவுடைய எதிர்ப்பு போராளிகளை தோற்கடித்து வருகின்றது. மக்களிடையே ஆதரவின்மை, பலமுறை கண்ட தோல்விகள் இவற்றின் விளைவாக எதிர்த்தரப்பு கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களாக சிதைந்து கொண்டுள்ளது; கூத்தா தாக்குதலுக்குப் பின் இந்நிலை அல்குவேடா பிணைப்புடைய எதிர்த்தரப்புப் படைகளின் அறிவிப்பான, அவர்கள் அசாத்தின் அலாவி நம்பிக்கையுடையவர்களை கைப்பற்றினால் கொல்வோம் என உறுதியளித்ததின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாத் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டுக்கள் ஒரேயொரு நோக்கத்திற்கு மட்டுந்தான் உதவுகின்றன: வாஷிங்டனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சிரியாவைத் தாக்க ஒரு போலிக் காரணம் கொடுப்பதற்கு, ஆட்சி இரசாயனத் தாக்குதல் நடத்தினால் சிரியா தாக்கப்படும் எனப் பலமுறை அவை அச்சுறுத்தியுள்ளன. கூத்தாவில் இரசாயனத் தாக்குதல் நடந்தது என்பது உண்மையானால், பிரான்சுவா ஹாலண்ட், டேவிட் காமரோன் மற்றும் பாரக் ஒபாமா அது செயல்படுத்தப்பட்டது குறித்து பஷர் அல்-அசாத்தைவிட அதிகம் அறிந்திருப்பர்.

ஒரு இரசாயனத் தாக்குதல் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் வெளிவருமுன்னரே மற்றும் அது குறித்த விசாரணை தொடங்கு முன்னரே—உண்மையில்  வழக்கமாக தெருவில் நடக்கும் ஒரு குற்றம் குறித்து போலீஸ் துறைகள் குற்றச்சாட்டை வெளியிடும் அவகாசத்திற்கும் குறைந்த நேரத்தில்— பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் அசாத்துடன் போர் வேண்டும் என அழைப்பு விடுத்தனர். தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மறுநாளே பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் “வலிமை” ஒன்றுதான் உரிய விடை என வலியுறுத்தினார்.

ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள், தங்கள் போர்த்திட்டத்தைத் தொடர்வதற்கு முன், ஒரு ஐ.நா. விசாரணை அல்லது சான்றுகள் தேவையில்லை என்றே கூறிவிட்டனர். நியூ யோர்க் டைம்ஸிடம் நேற்று அவர்கள் சிரியாவில் அமெரிக்கத் தாக்குதல்களுக்கான இலக்குப்பட்டியல் ஏற்கனவே வெள்ளை மாளிகையில் சுற்றி வருகிறது எனவும், தாங்கள் “ஐ.நா. விசாரணையாளர்கள் இடத்தை அணுகுவது குறித்த நீடித்த விவாதத்தில் ஈடுபடத்தயாராக இல்லை என்றும், இதற்குக் காரணம் இப்பொழுது நம்பகத்தகுந்த கண்டுபிடிப்புக்களை அவர்கள் கொண்டுள்ளனர்” என்றும் கூறினர்.

ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுக்களான இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு என்னும் “சிவப்புக் கோடு” மீறப்பட்டுவிட்டது குறித்த கவலையால் என்பது, முற்றிலும் மோசடித்தனமானதாகும். கூத்தாவில் என்ன நடந்தது என்பது குறித்து அது விசாரணை செய்யத் தயாராக இல்லை. மாறாக அசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் அது தொடங்க உள்ள இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு, செய்தி ஊடகத்திற்கு “நம்பகத்தன்மை உடையது” என அளிப்பதற்கு ஒரு  போலிக்காரணத்தைப் பெற அது விரும்புகிறது.

பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டன் நீண்ட விளைவுகளைக் கொண்ட ஒரு போரை நடத்த விரைகின்றன. ஏவுகணை அழிக்கும் ஆற்றல் உடைய அமெரிக்க கப்பல்கள் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்குச் செல்கின்றன, சிரியாவை தாக்குவதற்கு; இராணுவத் திட்டமிடுவோர் பாரிய குண்டுத் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துகின்றனர், சிரியாவில் இருக்கும் இஸ்லாமியவாத எதிர்த்தரப்பு போராளிகளுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் சிரியாவின் நட்பு நாடுகளான ஈரான் மற்றும் ரஷ்யா கொடுக்கும் அப்பட்ட எச்சரிக்கைகளை: சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல் பிராந்தியம் முழுவதும் கடுமையான விளைகளை ஏற்படுத்தும் என்று அவை கூறுவதை உதறித்தள்ளுகின்றனர்.

சிரியாவிற்கு எதிரான போர்த்தயாரிப்பு உந்துதல்களில் இருக்கும் புவி மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய மூலோபாயமியற்றுவோரில் ஒருவரான மூலோபாய, சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அன்டனி கோர்ட்ஸ்மனால் இரசாயனத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட நாளுக்கு இரு தினங்களுக்குப் பின் ஒரு நீண்ட அறிக்கையில் வெளியிடப்பட்டது.

அவர் எழுதினார்: “பஷர் அல் அசாத்  போரில் வென்றாலும், சிரியாவின் பெரும்பகுதி மீது கட்டுப்பாட்டைக் கொடுக்கும் வகையில் தப்பினாலும், ஈரான் ஈராக் சிரியா மற்றும் லெபனான் மீது பிளவுற்றிருக்கும் மத்திய கிழக்கின் மீது புதிய அளவு செல்வாக்கை கொண்டிருக்கும்; பிராந்தியம் சுன்னி, ஷியைட் என்று பிரிந்துள்ளது, உறுதியாக சிறுபான்மையினரை நாட்டை விட்டு வெளியேறச் செய்துள்ளது. அது இஸ்ரேலுக்கு புதிய இடர்களை அளிக்கும்; அது அமைதியாக இருக்கும் அசாத் என்ற நிலையை நம்ப முடியாது. 

இது ஜோர்டானையும் துருக்கியையும் வலுவிழக்கச் செய்யும்; இன்னும் முக்கியமாக ஈரானுக்கு வளைகுடாவில் கூடுதல் செல்வாக்கைக் கொடுக்கும். BP, ஈராக்கும் ஈரானும் ஒன்றாக கிட்டத்தட்ட உலகின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்களில் 20% ஐ கொண்டுள்ளன என மதிப்பிட்டுள்ளது, அதேவேளை மத்திய கிழக்கு 48%க்கும் மேல் கொண்டுள்ளது.”

அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், மத்திய கிழக்கின் பரந்த எண்ணெய் இருப்புக்கள் மீது தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரக்கூடிய அனைத்து தடைகளையும் அகற்றுதல் என்னும் நோக்கத்தை அடைய, ஈராக்கில் செய்தது போல் நூறாயிரக்கணக்கான சிரியர்களின் மரணங்களை களிப்புடன் செய்வர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்திடையே மற்றொரு எண்ணெய், பூகோள அரசியல் நலனுக்காக ஒரு போரில் ஈடுபடுத்தப்படுவது குறித்து ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக்கணிப்பு, சனிக்கிழமை வெளியிடப்பட்டது, அமெரிக்க மக்களில் 9%தான் சிரியாவில் அமெரிக்கத் தலையீட்டை ஆதரிக்கின்றனர் என்றும் 25%தான் அசாத் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதை ஆதரிப்பர் என்றும் காட்டுகிறது.

இந்த பொதுமக்கள் உணர்வை நன்கு அறிந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகங்கள், போர்த்திட்டங்களின் அடித்தளத்தில் உள்ள நலன்கள் குறித்து ஏதும் கூறுவதில்லை, அச்சக்திகள் அல்குவேடாவுடன் பிணைந்துள்ளவை, வாடிக்கையாக செய்தி ஊடகத்திடம் பொய் கூறுபவை என அறிந்தும் இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டுக்களை திறனாய்வதும் இல்லை. அரச கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் செய்தி ஊடகத்தால் நடத்தப்படும் இச்சமீபத்திய செயற்பாட்டை சூழ்ந்துள்ள பொய்களின் துர்நாற்றம், மற்றொரு ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்த பேரழிவு ஆயுதங்கள் பொய்கள் தொகுப்பை அளிப்பது போல்தான் உள்ளது.

சிரியக் குடிமக்களை பாதுகாப்பதற்கு என்னும் மனிதாபிமான உந்துதலால் தாங்கள் சிரியாவை தாங்கள் தாக்குகிறோம் என்னும் ஏகாதிபத்திய சக்திகளின் கூற்றுக்களை பொறுத்தவரை, இவை இழிவுடன் கருதப்பட வேண்டியவை ஆகும். எகிப்தில் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சிக்குழு பல்லாயிரக்கணக்கான ஆயுதம் அற்ற எதிர்ப்பாளர்களை படுகொலை செய்ய அனுமதித்த சில நாட்களுக்குப் பின் மற்றொரு குருதி கொட்டும் போரைத் தொடங்க இவை நடவடிக்கை எடுக்கின்றன.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் இப்பொழுது சிரியாவில் கட்டவிழ்த்து விடப்போவதாக அச்சுறுத்தும் போரை தொழிலாளர்களும் இளைஞர்களும் கட்டாயம் எதிர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தால் ஏகாதிபத்திய சக்திகள் தடுத்து நிறுத்தப்படாதவரை, கோர்ட்ஸ்மன் கோடிட்டுக்காட்டியுள்ள செயற்பட்டியலை தொடர அவர்கள் சிரியாவுடன் போர் என்பதற்கு அப்பாலும் செல்வர். ஏற்கனவே சிரிய போர் விளைவுகளால் அழிவிற்கு உட்பட்ட லெபனான், ஈராக் போன்ற நாடுகளைத் தவிர, ஏகாதிபத்திய சக்திகள் ஈரானையும் இறுதியில் ரஷ்யா, சீனாவையும் தங்கள் பார்வையில் கொண்டுள்ளன.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: