Facebook Twitter RSS

ஸ்னோடனின் அடுத்த ரகசியம்: அமெரிக்க உளவு வளையத்தில் அல்-ஜசீரா டி.வி. செய்தியாளர்கள்!


ட்வார்ட் ஸ்னோடன் வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களில் அடுத்த ரகசியம் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை NSA, கத்தாரை சேர்ந்த அல்-ஜசீரா டி.வி.யின் இமெயில்களையும், ரஷ்யாவின் ஏரோஃபுளோட் ஏர்லைன்ஸின் புங்கிங் சிஸ்டத்தையும் உளவு பார்த்த விபரங்கள்தான், அந்த ரகசியம்.


ஜெர்மன் பத்திரிகையான Der Spiegel, இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எட்வார்ட் ஸ்னோடன் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் ஒன்றின் பிரதி தமக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது இந்த ஜெர்மன் பத்திரிகை.
ஸ்னோடன் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை வைத்திருப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் பத்திரிகையான கார்டியனிடம் கூறிய பிரிட்டிஷ் அரசு, அந்த ஆவணங்களை அழித்துவிட சொன்னது.
அதன்பின், ரகசிய ஆவணத்தின் ஒரு பிரதி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உள்ளதாக தெரிய வந்தது. அதையடுத்து, அந்த ஆவணத்தை அழிக்கும்படி நியூயார்க் டைம்ஸூக்கு நோட்டீஸ் கொடுத்தது வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம்.

இந்த செய்தியை விறுவிறுப்பு.காமில் நாம் வெளியிட்டபோது, “இதே ஆவணத்தின் வேறு ஒரு பிரதி வேறு யாரிடம் உள்ளதோ?” என்று முடித்திருந்தோம். இப்போது, அட்ரா சக்கை.., ஜெர்மன் பத்திரிகை Der Spiegel, “என்னிடமும் இருக்கிறதே ஒரு பிரதி” என்று கையை உயர்த்தியுள்ளது. (இன்னும் எத்தனை பேரிடம் பிரதிகள் உள்ளனவோ!)
அமெரிக்க உளவுத்துறை NSA, வேறு பல நிறுவனங்களையும் உளவு பார்த்த போதிலும், இந்த இரு நிறுவனங்களும் ‘உளவுத் தகவல்கள் பெறக்கூடிய உயர் சோர்ஸூகள்’ என்கிறது, ஜெர்மன் பத்திரிகை. அதன் அர்த்தம், இந்த இரு நிறுவனங்களின் கம்ப்யூட்டர் சிஸ்டங்களிலும், அமெரிக்க உளவுத்துறைக்கு உபயோகமான பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதே.

ஸ்னோடன் வெளியிட்ட ரகசிய ஆவணத்தில், இந்த இரு நிறுவனங்களில் இருந்தும் பெறப்பட்ட உளவுத்தகவல்கள் ‘குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகரமானவை’ (notable success) என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இங்கிருந்து பல முக்கிய விபரங்களை அமெரிக்க உளவுத்துறை பெற்றிருக்கலாம் என ஊகிக்கலாம்.

உதாரணமாக, ரகசிய ஆவணத்தில் உள்ள ஒரு விஷயம்: மார்ச் 2006-ம் ஆண்டு (அப்போது ஜார்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார்) அமெரிக்க உளவுத்துறையின் நெட்வெர்க் ஆய்வு மையம், அல்-ஜசீரா டி.வி. நிறுவனத்தின் இமெயில்களுக்குள் ஊடுருவியது. அல்-ஜசீரா டி.வி.யின் ஸ்டார் செய்தியாளர்கள் சிலரது இமெயில்களில் இருந்து, ‘அதி ரகசியமான சில தொடர்புகள்’ பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டது அமெரிக்க உளவுத்துறை.

அல்-ஜசீரா டி.வி. நிறுவன செய்தியாளர்கள் சிலருக்கு, ‘அதி ரகசியமான சில தொடர்புகள்’ யாருடன் இருந்திருக்க முடியும்?

செப்.-11 தாக்குதலின்பின் அல்-காய்தா தலைவர் பின்லேடன் பிரத்தியேகமாக வெளியிட்ட சில வீடியோக்கள், அல்-ஜசீரா டி.வி.க்கே கிடைத்தன. அப்போது பின்லேடனின் வீடியோ பேட்டியை வெளியிட்ட முதலாவது மீடியா என்ற வகையில் புகழ்பெற்ற அல்-ஜசீரா, “பின்லேடனின் பேட்டி அடங்கிய வீடியே கேசட்டை ‘யாரோ ஒரு நபர்’ தமது அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சென்றார்” என்று தெரிவித்திருந்தது.

அது கப்சா என்பது உளவுத்துறைகளுக்கு தெரியும்.

பின்லேடனுக்கும், அல்-ஜசீராவுக்கும் இடையே ஒரு ‘லிங்க்’ இல்லாமல், இந்த கேசட் அல்-ஜசீராவுக்கு கிடைத்திருக்க சான்ஸே இல்லை. அந்த ‘லிங்க்’ யார் என்பதை அறிய அமெரிக்க உளவுத்துறைகள் மிக ஆர்வமாக இருந்திருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டியதில்லை அல்லவா?
யார் அந்த லிங்க்? என்ற கேள்விக்கான பதில்தான், அல்-ஜசீரா டி.வி. நிறுவன செய்தியாளர்கள் சிலரது இமெயில்களை உளவு பார்த்ததில் பெறப்பட்ட, ‘அதி ரகசியமான சில தொடர்புகள்’ பற்றிய விபரங்கள்! (நூற்றுக்கு 99 சதவீதம், அந்த ‘லிங்க் நபர்’ அமெரிக்க உளவுத்துறையால் உடனே ‘தூக்கப்பட்டு’ இருப்பார்! இப்போ எங்கே இருக்கிறாரோ.. உயிருடன் இருக்கிறாரோ..)

அதன்பின், பின்லேடன் நேரடியாகவே அல்-ஜசீரா டி.வி.க்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அல்-காய்தாவின் அப்போதைய துணைத் தலைவர் அய்மன் அல்-ஜவாகிரியும் கூடவே இருந்தார். (பின்லேடன் மறைவுக்குப்பின், இந்த அய்மன் அல்-ஜவாகிரிதான் தற்போது அல்-காய்தாவின் தலைவர்)

பின்லேடன், மற்றும் அல்-ஜவாகிரியுடன் அல்-ஜசீரா தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அமெரிக்கா பில்லியன் டாலர் கணக்கில் செலவுபண்ணி வலைவீசி தேடிவந்த பின்லேடனின் மறைவிடத்துக்கு அல்-ஜசீரா செய்தியாளர் மற்றும் கேமராமேன் செல்ல முடியும் என்றால், எப்படியான ‘அதி ரகசியமான சில தொடர்புகள்’ இருந்திருக்க வேண்டும்?
அல்-ஜசீரா டி.வி. முக்கியஸ்தர்களின் இமெயில்களை உளவுபார்த்தால், என்ன ரகசியம் கிட்டும் என்று புரிகிறதா?

ரஷ்ய விமானசேவை ஏரோஃபுளோட்டின் புங்கிங் சிஸ்டத்தையும் உளவு பார்த்த காரணமும் கிட்டத்தட்ட அதுதான். அமெரிக்க உளவுத்துறைகளால் தேடப்பட்ட நபர்கள் பலர் ஏரோஃபுளோட் விமானங்களிலேயே பயணம் செய்தது பின்னர் தெரிய வந்திருந்தது.

அவ்வளவு ஏன், அமெரிக்க உளவுத்துறை ஏரோஃபுளோட்டின் புங்கிங் சிஸ்டத்தை உளவு பார்க்கிறது என்ற ரகசியத்தை லீக் செய்த எட்வார்ட் ஸ்னோடன்கூட, ஹாங்காங்கில் இருந்து மாஸ்கோவுக்கு பயணம் செய்தது, ஏரோஃபுளோட் விமானத்தில்தான்.

ஏரோஃபுளோட் விமான நிறுவன புக்கிங் சிஸ்டத்தை அவர்கள் எப்படி உளவு பார்க்கிறார்கள் என்பதை தெரிந்திருந்த ஸ்னோடன், அதில் தனது பெயர் சிக்காத வண்ணம் பார்த்துக்கொண்டு பயணம் செய்திருக்கக்கூடும்.

எட்வார்ட் ஸ்னோடனால் கடத்தி வரப்பட்ட ஆவணங்களில், இன்னமும் எத்தனை ரகசியங்கள் உள்ளனவோ… அவையெல்லாம் தற்போது யார் யாருடைய கைகளில் உள்ளனவோ.. அடுத்த ரகசியம் எப்போது வெளியிடப்பட போகிறதோ! (மகா ஆச்சரியம், இவ்வளது முக்கியமான விவகாரத்தை அனேக தமிழ் மீடியாக்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை!)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: