Facebook Twitter RSS

சி.ஐ.ஏ. டி-கிளாசிபைடு ரகசியம்: பண்ணை வீட்டில் அல்-ஸவாகியின் கடைசி டின்னர் பார்ட்டி!

மெரிக்க உளவுத்துறை செய்த பல ரகசிய ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள், அந்த ஆபரேஷன்கள் முடிந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு ரகசியமாகவே வைத்திருக்கப்படும். இப்படியான ரகசிய ஆவணங்களை, classified documents என்பார்கள். காலப்போக்கில் (சில ஆண்டுகளின் பின்) சில ஆவணங்களின் ரகசியங்கள் விலக்கப்படும். அதை Declassification என்பார்கள்.

இப்படியான ‘முன்னாள் ரகசியங்கள்’ அடங்கிய ஆவணங்களை, அமெரிக்காவின் தகவல் அறியும் சட்டப்படி, அமெரிக்கப் பிரஜை ஒருவர் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். அநேக மீடியாக்கள், எந்த ரகசியங்கள் டிகிளாசிஃபை பண்ணப்படுகின்றன என கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்து, உடனே விண்ணப்பிப்பார்கள்.

அப்படி Declassification செய்யப்பட்ட ஆவணங்களில் ஒன்று, அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்தபோது, அப்போதைய ஈராக்கிய அல்-கய்தா தலைவர் அல்-ஸவாகி எப்படி கொல்லப்பட்டார் என்பது.

Declassification செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து, அந்த ஆபரேஷன் எப்படி நடைபெற்றது என்று இப்போது முழுமையான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவையும் சுவாரசியமாக இருக்கின்றன.
பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே, விமானம் மூலம் குண்டு வீசப்பட்டு அல்-ஸவாகியும் வேறு சிலரும் கொல்லப்பட்டனர். குண்டு போடப்பட்ட பண்ணை வீட்டுக்கு அல்-ஸவாகி சென்ற காரணம், ஒரு டின்னர் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக. ஈராக்கிய தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 60 கி.மீ. வடக்கே அமைந்திருந்த பண்ணை வீடு அது.

அந்த இரவு விருந்தில் கலந்து கொண்டவர்கள், அல்-ஸவாகியுடன், மூன்று பெண்களும் மூன்று ஆண்களும்.

ஆண்களில் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒருவர். இவர்தான் அல்-ஸவாகியின் மத ஆலோசகர். அவரை விட மற்றொரு முக்கிய நபரும் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவர், அல்-ஸவாகியின் நம்பிக்கைக்குரிய கூரியர். இவர் மூலமாகவே அல்-ஸவாகி தகவல்களை மற்றையவர்களுக்கு அனுப்புவது வழக்கம்.

சி.ஐ.ஏ. அல்-கய்தா தலைவர்களை தகவல் தொழில்நுட்பத்தை வைத்து உளவு பார்ப்பது தெரிய வந்தவுடன், பின்லேடன் உட்பட அல்-கய்தா முக்கியஸ்தர்கள் அனைவருமே செல்போன்களையோ, இமெயில்களையோ உபயோகிப்பதை நிறுத்தி விட்டனர். மாறாக, நம்பிக்கைக்குரிய தகவல் அனுப்புனர்களாக கூரியர்களை உபயோகிக்க தொடங்கினர்.
(பின்னாட்களில் அல்-காய்தா தலைவர் பின்லேடனின் கூரியர் ஒருவரை கண்காணித்து, அவர் மூலமாகவே பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அறிந்து அவரை கொன்றது சி.ஐ.ஏ.)

அல்-காய்தாவின் ஈராக்கிய பிரிவுக்கு தலைவராக இருந்த அல்-ஸவாகிக்கு நம்பிக்கைக்குரிய சில கூரியர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாகத்தான் அல்-ஸவாகியின் உத்தரவுகள், ஆராக்கின் பல பகுதிகளிலும் இருந்த மற்றய தளபதிகளுக்கு போய்ச் சேர்ந்து கொண்டிருந்தன.

செல்போன் உரையாடல்களை அமெரிக்கர்கள் ஒட்டுக் கேட்பார்கள் என்று தெரிந்து கொண்டு, உஷாராக கூரியர்களை பயன்படுத்திய அல்-ஸவாகிக்கு மற்றொரு விஷயம் தெரிந்திருக்கவில்லை.
அது-

அல்-ஸவாகி பயன்படுத்திய கூரியர் ஒருவரை உளவுத்துறைகள் ட்ரக் டவுன் பண்ணிவிட்டார்கள் என்ற விஷயம்.

‘உளவுத்துறைகள்’ என பன்மையில் எழுதுவதன் காரணம், அமெரிக்க உளவுத்துறையுடன், ஜோர்தானிய உளவுத்துறையும் இணைந்தே அல்-ஸவாகியின் கூரியரை ட்ராக்-டவுன் பண்ணியிருந்தன.

இந்த நபரைப் பற்றிய விபரம் முதலில் ஜோர்தானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. அதன்பின் பல வாரங்களாகவே ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று தங்களுக்குள் சங்கேத மொழியில் கூறிக் கொண்டிருந்தார்கள். மிஸ்டர் எக்ஸின் நடமாட்டங்கள் மீதும் கண் வைக்கத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே அல்-ஸவாகியின் மத ஆலோசகர் அப்துல் ரஹ்மான் இவர்களது கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தாலும், அவர் அல்-ஸவாகியைச் சந்தித்ததாக தெரியவில்லை.

இதற்கிடையே மிஸ்டர் எக்ஸ், ஜோர்தானிய உளவுத்துறையின் கண்பார்வையில் இருந்து திடீரென மறைந்து போனார். அவர் ஈராக்கை விட்டு வெளியேறியிருக்கலாம் என  நினைத்த ஜோர்தானிய உளவுத்துறை, அவரை ட்ராக் பண்ண சி.ஐ.ஏ.வின் உதவியை நாடியது. மிஸ்டர் எக்ஸ் தொடர்பான விபரங்கள் அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு போய் சேர்ந்தன.
இதற்கிடையே, மிஸ்டர் எக்ஸ் ஈராக்கை விட்டு வெளியேறவில்லை என்றும், பாக்தாத்துக்கு 60 கி.மீ. வடக்கேயுள்ள பண்ணைவீடு ஒன்றில் தென்படுகிறார் என்றும் ஜோர்டானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. ஏற்கனவே மிஸ்டர் எக்ஸ் பற்றிய தகவல்கள் சி.ஐ.ஏ.வுக்கு பாஸ் செய்யப் பட்டுவிட்டதால், இந்த பண்ணை வீடு பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டது.

அதன்பின், விவகாரத்தை முழுமையாக தமது கைகளில் எடுத்துக் கொண்டது சி.ஐ.ஏ. ஜோர்தானிய உளவுத்துறை ஒதுங்கிக் கொண்டது.
உடனே அந்த இடம் கண்காணிக்கப்பட வேண்டிய இடமாகிவிட்டது. அல்-ஸவாகி தனது கடைசி தினத்தில் அங்கே செல்வதற்கு முன்னரே அமெரிக்க ராணுவத்தின் ரேஞ்சர்கள் பண்ணை வீட்டைச் சூழவுள்ள அடர்த்தியான மரங்களில், நாள் கணக்கில் மறைந்து இருந்திருக்கிறார்கள்.
மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கும் மையக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு நாள் இரவிலும் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்தவர்கள் மாறி, புதிய ஆட்கள் வந்து மறைந்திருக்கிறார்கள்.

பண்ணை வீட்டுக்கு மிஸ்டர் எக்ஸ் வந்து போய்க்கொண்டிருந்தார். ஆனால், அல்-ஸவாகி அந்தப் பக்கமே தென்படவில்லை. இருப்பினும், ராணுவ ரேஞ்சர்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தது சி.ஐ.ஏ.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் அடுத்த தகவல், மற்றொரு சோர்ஸிடம் இருந்து சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது – மிஸ்டர் எக்ஸ் நடமாடிய பண்ணை வீட்டுப் பகுதியை நோக்கி, அப்துல் ரஹ்மான் செல்கிறார் என்பதே அந்த தகவல்.

உடனடியாக இந்தத் தகவல் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மிஸ்டர் எக்ஸ் ஒரு பண்ணை வீட்டில் அடிக்கடி தென்படுகிறார். அதன்பின் ஒருநாள் அப்துல் ரஹ்மானும் அதே பண்ணை வீட்டை நோக்கிச் செல்கிறார் என்றவுடன், அல்-ஸவாகி அந்த பண்ணை வீட்டுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்று சி.ஐ.ஏ. புரிந்து கொண்டது. (அடுத்த பாகத்தில் நிறைவுபெறும். நாளை காலை 0700 மணி GMTக்கு அப்டேட் செய்யப்படும்)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: