Facebook Twitter RSS



பயங்கரவாதிகளா? பலியாடுகளா?

பெங்களூருவிலிருந்து ஆ. பழனியப்பன்

அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் என்று 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் கூடாரமாகி வருகிறதா கர்நாடகா?

சிலவாரங்களுக்குமுன் வதந்தியைக் கண்டு மிரண்டு வடகிழக்கு மாநிலத்தவர் பல்லாயிரக்கணக்கில் பெங்களூருவில் இருந்து அச்சத்துடன் வெளியேறினர். இப்போது பதட்டம் ஓய்ந்து  சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருக்கும்  நிலையில் மீண்டும் அங்கு பரபரப்பு.  இந்தமுறை ‘பயங்கரவாதிகள்’ என்கின்ற குற்றச்சாட்டுடன் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்து மத அமைப்பின் தலைவர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்ய இவர்கள் திட்டமிட்டதாக அவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியிருக்கிறது. சர்வதேசப்பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது .

இதுவரை 14 பேர் கைது செயப்பட்டுள்ளனர். ஆங்கில நாளேடு ஒன்றின் நிருபர், டாக்டர், என்ஜினீயர், எம்.பி.ஏ. பட்டதாரி ஆகியோரும் இந்தக் கைதுப் பட்டியலில் அடக்கம். இதற்கு முன்பாக பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்கள் அதிகம் படித்தவர்களோ,பெரிய பின்புலம் கொண்டவர்களோஇல்லை. ஆனால், தற்போது உயர்கல்வி பெற்று பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் சிலர்  பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது கவலைக்குரியது..." என்கிறார், பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.

பல்வேறு கலாச்சாரப் பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழுகிற ஒரு ‘காஸ்மோபாலிடன்’ நகரம் எனப் பெயர் பெற்ற நகரம் பெங்களூரு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும் அங்கு உள்ளன.  ஐ.டி. துறையும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

இப்படிப்பட்ட பெங்களூரு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா? கைது செயப்பட்டவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தானா? விசாரிக்கக் கிளம்பியது ‘புதிய தலைமுறை’. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது பெங்களூரு பஸ்வேஸ்வரா நகர் காவல்நிலையத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரி ஜிதேந்திரநாத் அளித்த புகார் மனுவின் நகல் நமக்குக் கிடைத்தது.

‘தடைசெயப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சிலர் பெங்களூரு மற்றும் ஹூப்ளி நகரங்களில் முக்கியப் பிரமுகர்கள் சிலரையும், இந்து மதத் தலைவர்களையும் ஒழித்துக் கட்ட சதித்திட்டம் தீட்டியிருப்பதாக 26.08.2012 அன்று தகவல் கிடைத்தது. சந்தேகத்துக்குரிய நபர்களைக் கண்காணித்தோம். அப்போது, ‘கன்னட பிரபா’ நாளேட்டின் கட்டுரையாளர் பிரதாப் சின்ஹாவை கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த ஷோயிப் அகமது மிர்ஜா, அப்துல் ஹகீம் ஜமதர் என்ற இரு இளைஞர்களை மடக்கிப்பிடித்தோம். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றையும், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன் பிரதாப் சின்ஹா எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் நகலையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றினோம்’ என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சில மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், சில உறுதி செய்யப்படாத ஊகங்கள்.

 கர்நாடகத்தில் தீவிரவாதப் பதட்டச் சூழலையும், சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கும் வகையில் சில நாளேடுகள் தினமும் செய்திகள் வெளியிடுகின்றன. உறுதி செய்யப்படாத தகவல்களைக் கசியவிடும் காவல்துறையினரின் செயலும், ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடும் போக்கும் விரும்பத்தகாதவை" என்றார் சமூக நல்லிணக்க அமைப்பின் நிர்வாகியும், கட்டுரையாளருமான ஷிவசுந்தர்.

‘காவல்துறை வட்டாரங்கள்’ என்று கூறிவிட்டு பத்திரிகைகளில் பலவாறாக செய்திகள் வருவதைக் கண்டு  பொறுமையிழந்த பெங்களூரு காவல்துறை ஆணையர் ஜோதி பிரகாஷ் மிர்ஜா, பத்திரிகை எடிட்டர்களை அவசரமாக அழைத்துப் பேசினார்.

பத்திரிகைகளில் ஊகத்தின் அடிப்படையில் ஏராளமான செய்திகள் வருவதாக ஆணையர் கூறினார். விசாரணை டீமில் இருக்கிற சில போலீஸ் அதிகாரிகள்தான் தகவல்களைக் கசியவிடுகிறார்கள் என்று சொன்னோம். ‘யார் என்று சொல்லுங்கள், உடனே சஸ்பெண்டு செய்கிறேன்’ என்று ஆணையர் கூறினார். செய்தி வெளியிடுவது குறித்து பெரிய லெக்சரே கொடுத்தார். ஆனால், மறுநாள் காலையில், விசாரணை அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் என்னென்ன கூறினார்கள் என்ற விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்தால் உடனடியாக அதைக் காவல்துறை மறுக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்வதில்லை" என்று குற்றம் சாட்டுகிறார், மூத்த பத்திரிகையாளர் மற்றும் ‘தி ஹிண்டு’நாளேட்டின் பெங்களூரு பதிப்பின் பொறுப்பாசிரியருமான பார்வதி மேனன்.

சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரை படுகொலை செய்யத் திட்டமிட்டனர் என்பதுதான் காவல்துறையின் குற்றச்சாட்டு. ஆனால், ‘கைகா அணுமின் நிலையத்தைக் குண்டுவைத்துத் தகர்க்க அவர்கள் திட்டம் தீட்டினர்’ என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங்கூறினார். மறுநாள், அதுபற்றி காவல்துறை ஆணையரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘அது தவறான தகவல்’ என்று அவர் மறுத்தார். ‘மத்திய உள்துறைச் செயலாளர் அப்படிக் கூறியிருக்கிறாரே?’ என்று கேட்டதற்கு, ‘அப்படியென்றால் அதை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’என்று கடுப்பாகக் கூறியிருக்கிறார் ஆணையர். அவர் மறுத்த பிறகும்கூட, ‘கைகா அணுமின் நிலையத்தை தகர்க்க பயங்கரவாதிகள் சதி’என்று சில பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக காவல்துறை அளித்துள்ள தகவல்கள் முரண்பாடாக இருப்பதாகவும்  குற்றம் சாட்டப்படுகிறது.

26.08.2012 காலை 10 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அன்றைய தினம் காலை 8 - 9.30 மணியளவில் அவர்களை போலீசார் பிடித்துச் சென்றதாக நேரில் பார்த்த  மக்கள் கூறுகின்றனர். அவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருந்தனர், அதில் 5 குண்டுகள் இருந்தன என்பது போலீசாரின் கூற்று. அல்கொய்தா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றால், அவர்களை போலீசார் மடக்கியபோது ஒரு ரவுண்டு கூடவா சுடாமல் இருந்திருப்பார்கள்? இதுபோன்ற பல சந்தேகங்கள் உள்ளன" என்கிறார், குடிமக்கள் உரிமைக்கான பாதுகாப்பு சங்கத்தின்  தலைவர் எஸ். அக்மல் ரஸ்வி.

பயங்கரவாதம் போன்ற  விஷயங்களில் பத்திரிகைகளுக்கான முக்கிய ‘சோர்ஸ்’ போலீஸ்தான். எனவே, தவறான தகவல்கள் கசிவதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு காவல்துறை உயரதிகாரிகளுக்கு உண்டு" என்கிறார் பார்வதி மேனன்.

கன்னட முஸ்லிம் ஒற்றுமை முன்னணியின் தலைவர் முகமது இக்பாலை சந்தித்தோம்.2008ல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஹூப்ளி நீதிமன்றத்தில் குண்டு வெடித்தது. உடனே இஸ்லாமியர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் அப்பாவி என்பதும், குண்டுவெடிப்புக்குக் காரணமான நபர், ஸ்ரீராம் சேனாவுடன் தொடர்புடையவர் என்பதும் பின்னர் தெரியவந்தது. இதுபோல பல உதாரணங்கள் உள்ளன. பெங்களூரு கைது சம்பவத்தைப் பொறுத்தவரை, அந்த இளைஞர்கள் குற்றம் செய்தார்களா அல்லது அப்பாவிகளா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களில் யாராவது தவறு செய்திருந்து, அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை அவர்கள் சந்திக்கட்டும். ஆனால், அப்பாவி இளைஞர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படக்கூடாது" என்றார் முகமது இக்பால்.

இந்த விவகாரத்தில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள். கைது செய்யப்பட்டுள்ள வாஹித்உசேனின் தாயார் மெஹ்ருன்னிஷாவிடம்பேசினோம்.

பயங்கரவாதி என்று என் மகனை கைது செய்திருக்கிறார்கள். இதனால், எங்கள் குடும்பமே நொறுங்கிப் போயிருக்கிறது. என் மகன் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டான். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தி, வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்" என்றார் மெஹ்ருன்னிஷா.

இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் நோக்கம் இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.  

சுரங்க ஊழல், வீடு ஒதுக்கீட்டில் ஊழல் என பாஜக அரசு வரிசையாக பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளது. இதில், முதலமைச்சரும் அமைச்சர்களும் சிறை சென்றனர். அமைச்சர்கள் சிலர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலகினர். பா.ஜ.க.வுக்குள் கோஷ்டி மோதல் உச்சத்தில் உள்ளது. மாநிலம், கடும் வறட்சியில் சிக்கியிருக்கும் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்கள் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றதைக்கண்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இத்தகைய சூழலில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, இந்தக் கைது நடவடிக்கைகள் மூலமாக மக்களின் கவனத்தை திசைதிருப்பி, அரசியல் ஆதாயம் பெற பாஜக முயற்சிக்கிறது" என்கிறார், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடகா மாநில செயற்குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம்.

தற்போதைய நிகழ்ச்சிப் போக்குகளால் இஸ்லாமிய மக்கள் மத்தியில் கடும் அச்சம் உருவாகியுள்ளதை உணர முடிந்தது. கமர்சியல் ஸ்ட்ரீட் பகுதியில் இருந்து டஸ்கர் டவுன் என்ற இடத்துக்குச் செல்ல, ஒரு ஆட்டோவைப் பிடித்தோம். ஆட்டோ ஓட்டுநர் ஓர் இஸ்லாமிய இளைஞர். பெங்களூரு நகரம் குறித்தும் சில விஷயங்கள் குறித்தும் இயல்பாகப் பேசிக்கொண்டு வந்தார். சில இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று போலீசார் கைது செய்திருக்கிறார்களே என்று கேட்டதும் அவரது முகம் இறுகிப்போனது. ஆட்டோவைவிட்டு நாங்கள் இறங்கும்வரை அவர் வாய் திறக்கவே இல்லை.

நன்றி:புதிய தலைமுறை நாளேடு 


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: