Facebook Twitter RSS

முஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்வா' மெசின்கள்!

      
1924 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் திகதி முஸ்லீம் உம்மத்தின் கேடயமான கிலாபா அரசு திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது . குப்ரிய ஏகாதிபத்திய எதிரிகள் இஸ்லாத்தின் பூமிகளை சூறையாடவும் ,முஸ்லீம்களை வஞ்சம் தீர்க்கவும் திட்டமிட்டபோது ,தகர்க்கப் படவேண்டிய முதல் இலக்காக இந்த கிலாபா அரசே அவர்களுக்கு தெரிந்தது .அதை வீழ்த்த சிந்தனை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லீம் உம்மாவில் இருந்த சிலரே கோடரிக் காம்புகளாக பயன் பட்டனர் .


          இவ்வாறு முஸ்லீம் உம்மத் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு 90 வருடங்கள் நெருங்கி விட்டது . அவலங்கள் ,அநீதிகள் ,அத்துமீறல்கள் என தொடரான பல கசப்பான அனுபவங்களை அது சுமந்துள்ளது .எதிரிகளின் சதிகள் ஒருபுறம் , தனது சுய பலவீனங்கள் மறுபுறம் என பல சவால்களை அது எதிர்நோக்கிக் கொண்டுள்ளது . இந்த நிலையை காரணம் காட்டியே இஸ்லாமிய இயக்கங்களின் பருவ காலம் ஆரம்பிக்கின்றது .

         இகாமதுத் தீன் என்ற பொதுப் பதாகையின் கீழ் இவர்களது தோற்றம் அமையப் பெற்றாலும் ,அதற்காக தேர்ந்த பாதைகள் பலவாக இருந்தன .இருந்தும் அதில் இருந்த வேடிக்கை என்னவென்றால் இந்த ஓவ்வொரு இயக்கமும் தனது பாதையை சுன்னாவில் இருந்தே பெற்றுக் கொண்டதாக நியாயப்படுத்தின ! இவர்கள் முஸ்லீம் உம்மத் மத்தியில் தமக்கான அங்கீகாரத்தை வேண்டிய உழைப்பையே முதல் நிலைப்படுத்தின ! இந்த இடத்தில்  இருந்தே 'பிடாரிகள் பேயாட்டம் ஆடும்' இயக்க மோதல் வரலாறு அத்திவாரம் இடப்படுகின்றது .

        சிந்தனை வீழ்ச்சியிலும் குப்பார்களின் அதிகாரப் பிடியிலும் சிக்கித் தவித்த முஸ்லீம் உம்மத் இவர்களால் பல வேடிக்கையான பொழுதுகளையும் , ஆபத்தான விளைவுகளையும் சந்தித்தது . மறுமலர்ச்சிப் பாதையின் திசையை ஆளுக்கொன்றாக இந்த இயக்கங்கள் காட்டி நின்றதில் முஸ்லீம் உம்மத் மீண்டும் ,மீண்டும் பிரிந்து சிதைந்து இந்த 90 வருடங்களில் மிகவும் களைத்துப் போனதுதான் மிச்சமாகும் . 

          இயக்கம் என்ற பெயரில் வரும் புதுவரவுகள் ஏராளமாகிப் போக முஸ்லீம் உம்மத்தும் இதற்கு பழக்கப் பட்டுப் போனது . காலப்போக்கில் இதுவே ஒரு சுவையான அம்சமாக மாறி "இதோ வந்துட்டான்யா வந்துட்டான் !! சரி இவன் என்ன சொல்லப் போகிறான் !? யார் யாரை பிழையாக்கி தன்னை சரிப்படுத்தப் போகிறான் !? " என்ற பட்டிமன்ற பார்வையோடு 'அலர்ஜியான ' இந்த வேதனையிலும் ஒரு நகைச்சுவை சுகத்தையும் அனுபவித்து போக முடிவு செய்தது . 

       சராசரி மதரசா ,குல்லியா முதல் கோட் சூட் போட்ட ஜாமியா வரை இந்த வீன்வேலையை தீன் வேலையாக கற்றுத் தரும் பயிற்சி மன்றங்களாக பதாகைகளை ஏந்தின. இது அந்த இயக்கத்தின் மதரசா அது அந்த அமைப்பின் ஜாமியா என குதறப்பட்ட ஆலிம் உற்பத்திக் கூடங்களில் இருந்து ஆட் பிடிக்கும் வேட்டைக்கு 'பாஸ்ட் அவுட்டுகள் ''வேஸ்ட் அவுட்டுகளாக' வெளிவந்தன . தான் சார்ந்த இயக்கத்தின் கருத்தை இஸ்லாத்தின் சிந்தனையாக பேசி நிற்கும் புரோகிதர்களும் ,அவர்களின் பின்னால் விசுவாசம் மிக்க ஒரு 'முரீத்' கூட்டமும் என ஒரு பிரிவினைப் பயங்கரம் முஸ்லீம் சமூக மயமாக்கப் பட்டது .


     எதிலே முரண்பட்டால் ஒருவன் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறுவான் ?என்ற நிலையில் தமக்கென ஒரு முடிவெடுத்துக் கொண்டு இயக்க இலாபம் கருதிய 'பத்துவா மெசின்கள் ' பரவலாகின ! முஸ்லீம் என்ற பதத்தின் மீதான இஸ்லாத்தின் அடிப்படை நிபந்தனை இயக்க வெறிக்கு முன் நாறடிக்கப்பட! ஒவ்வொரு முஸ்லீமும் பகுதி தொகுதி வாரியாக பிரிக்கப் பட்டான் .இவர்கள் இஸ்லாம் அங்கீகரித்த 'இஜ்திஹாதின் 'வாயில்களை இழுத்து மூடி அதை தீண்டத் தகாததாக காட்டுவார்கள் !ஆனால் மறுபக்கம் குப்ரிய மேலாதிக்க ஆதரவிலும் அதன் நிழலிலும் தஞ்சம் புகுந்திருப்பார்கள் .
குப்பார்களின் உள்ளம் குளிர சகோதரத்துவத்தை பார்த்து சந்தி சிரித்தது . முஸ்லீம் உம்மத்தின் நிலை மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையானது !

         குப்ரியத்தின் மேலாதிக்க சூழல் , அதன் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட வாழ்வு என இஸ்லாமிய கண்கள் கட்டப்பட்ட முஸ்லீம் உம்மத்தை ஆளுக்கொரு திசையாக இழுத்து  இதுதான் கிழக்கு இங்கிருந்துதான் சூரியன் உதிக்கும் என்ற கருத்தியல் பலாத் காரத்தை சில இஸ்லாமிய இயக்கங்கள் தொடுத்தார்கள் . அதன் நோக்கம் 1.ஆட்சேர்ப்பு 2. வருமானம் என்பனவே ஆனால் வெளிச் சொல்வது கொள்கை வளர்ப்பு !!

         அடுத்தவன் சரக்கை 'கொண்டம்' பண்ணியாவது தனது சரக்கை விற்கவேண்டும் என்ற முதலாளித்துவ 'அஜெண்டாவின்' கீழ் மாற்று இயக்கங்களை எதிரியாக ,துரோகியாக ,வழிகேடர்களாக ,காபிர்களாக சில இயக்கங்கள் காட்டத் தொடங்கின .அதற்காக அடுத்த இயக்கங்களை பற்றி ஒரு பூரண 'ஸ்கேர்ன் ' தேவைப்படவில்லை ! கொஞ்சம் வரலாறு அந்த இயக்கத்தின் பதிவுகளில் இருந்து தமது கருத்துக்கு 'ஹைலைட்' ஆகும் சில நடப்புகள் போதும் ! இந்த பஞ்சாயத்து வக்கீல்கள் பட்டையை கிளப்பி விடுவார்கள் .கருத்து வேறுபாட்டுக்கு உள்ளான விடயங்களிலும் 'நெகடிவ் போர்மட்' காட்டி சமூக பார்வையில் மாற்று இயக்கத்தை கொச்சையாக காட்டும் சில்லறைத் தனங்கள் 'தவ்வா' என்ற பெயரில் அறிமுகமானது .

       மொத்தத்தில் இவ்வாறான இயக்கங்களின் வருகை இஸ்லாமிய இயக்கத்தின் தேவைப்பாட்டை கேள்விக்குறி ஆக்கியுள்ளதோடு ,முஸ்லீம் உம்மத்தை அதன் இயல்பான எழுச்சி கரமான சிந்தனைப் போக்கை நோக்கி நகர்வதை விட்டும் தடுத்து விட்டது . நேற்றுவரை வாதம் விவாதம் அதன் பின் ஒரு 'பத்துவா'!? என இருந்த இந்த 'ஸ்டைல்' இப்போது 'பத்துவா' பின் முடிந்தால் வாதத்துக்கு வா !? எனும் புதிய 'பேஷனாக' மாறியுள்ளது ! இந்த மனோ வியாதிப்படி இவர்கள் ஆதாரம் கேட்பது தெளிவடைய அல்ல ,மாறாக தமது கோணத்தில் இன்னும் சிதைவடையச் செய்யவே ஆகும் . சமூகம் உம்மி மக்தூம் (ரலி ) போன்ற தரத்தில் இருக்கும் நிலையில் இந்த அப்துல்லாஹ் பின் உபை களின் ஆட்டம் மிக ஆபத்தானது .

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: