Facebook Twitter RSS



ஹமாஸ்-பதாஹ் கூட்டரசாங்கம்: புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

நீண்ட எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மீண்டும் கூட்டரசாங்கம் ஒன்றினை நிறுவும் நோக்குடன் ஹமாஸ் மற்றும் பதாஹ் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு முன்னரும் எத்தனையோ தடவை இவர்களுக்கு மத்தியில் உடன் பாட்டை ஏற்படுத்துவதற்கான பல முயற்சிகள் பல தரப்பினராலும் நடந்தேறின. ஆனால்,  ‘பலஸ்தீனின் தேசிய நலன்’என்ற பெயரில் சர்வதேச சக்திகளின் எஜன்டாக்களை தனது தலையில் சுமந்து வந்து தேசியவாத பதாஹ் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்ததால் அவை சாத்தியப்பட வில்லை.

என்றாலும், இம்முறை கூட்டரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகள் சற்று நம்பிக்கையளிப்பது போல் தோன்றுகின்றது. காரணம், இம்முறை பதாஹ் மற்றும் ஹமாஸ் இடையிலான புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தை என்ற சிந்தனை எழுந்த சூழமைகள் முன்னைய காலங்களை விட வித்தியாசமாக அமைந்திருப்பதாகும்.
அண்மையில் மேற்குக் கரையை தனது அதிகாரத்தில் கீழ் வைத்திருக்கும் பதாஹ்வும், காஸாவை தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸும் பெற்றுக் கொண்ட இரு முனை வெற்றிகளும், உலகின் பரவலான எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் தன்பாட்டில் அதிகரித்து வரும் குத்ஸ் பிரதேச குடியேற்றங்களும், பதாஹ்வையும் ஹமாஸையும் கூட்டாக செயற்படுவதே நலன் என்ற புள்ளியில் இணைத்திருக்கின்றன.
இதுவே இம்முறை உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை இரு சாராருக்கும் உணர்த்திய நேரடிக் காரணங்கள் எனலாம். 
இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், அண்மைக் காலமாக ஹமாஸிற்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கிடைத்து வரும் அங்கீகாரமும், பல நாட்டு இராஜ தந்திரகளின் காஸா விஜமும் பதாஹ்வை சற்று சிந்திக்க வைத்துள்ளது போன்று தென்படுகிறது.
குறிப்பாக காஸா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹமாஸிற்கான ஆதரவு பதாஹ் ஆளுகை பிராந்தியமான மேற்குக் கரையில் பாரியளவில் அதிகரித்தது. அது மாத்திரமன்றி, சர்வதேச ஊடகச் சேவையொன்று நடாத்திய கருத்துக் கணிப்பில், மேற்குக் கரையில் பதாஹ்விற்கான ஆதரவில் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதாவது கிட்டத்தட்ட 54% மாக இருந்த அறபு தேசியவாதத்தை பின்புலமாகக் கொண்ட பதாஹ்விற்கான ஆதரவு 44% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய நிலைமாற்று தோற்றப்பாடுகளும் பதாஹ்விற்கு ஹமாஸுடன் கைகோர்ப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியது என்பதனையும் மறுக்க முடியாது. அத்துடன் அறபு இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றங்களும், இஸ்லாமியவாதிகளது எழுச்சியும் தேசியவாத பதாஹ்வை இஸ்லாமியப் பின்புலம் கொண்ட ஹமாஸுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நோக்கி நகர்த்தியமைக்கு பங்களித்த மற்றொரு முக்கிய உள்ளகக் காரணியாகும். 
பதாஹ் பலஸ்தீனப் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வை முன்னுரிமைப்படுத்துகிறது. ஹமாஸ் ஆயுத ரீதியான தீர்வை முற்படுத்துகிறது. இதனால் சர்வதேசத்தின் ஆசிர்வாதத்தோடு இவர்கள் இருவரும் ஒன்று சேரும் புள்ளிகள் மிக அரிது.
எனவே சமீபத்திய இஸ்லாமியவாதிகளுக்கு சார்பான அரசியல் சூழமைவுகளே இவர்களை ஒன்று சேர்ப்பதில் கூடிய பங்கு வகித்திருக்கிறது என்கிறார் பஹ்மி ஹுவைதி.
மேற்கூறப்பட்டவைகள் போக, கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை சார்ந்த 3 முக்கிய அம்சங்கள் இம்முறை இடம் பெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையை தருவதாக அல்ஜஸிராவின் அரசியல் ஆய்வாளர் பிராஸ் அபூ ஹிலால் குறிப்பிடுகிறார்.
அவை யாவன:
*      இம்முறையும் கூட்டரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல அமர்வுகளாக இடம்பெறவுள்ளன. அவற்றுக்கிடையிலான கால இடைவெளி மிகவும் குறுகியதாக உள்ளமை சாதகமான ஒரு அம்சமாகும். ஏனென்றால், முன்பெல்லாம் அமர்வுகளுக்கிடையிலான கால இடைவெளி பாரியதாக இருந்தன. இதனால், வெளிச்சக்திகளின் தலையீடுகள் பல எற்பட்டு அடுத்த கட்ட அமர்வுகள் நடைபெறாமலேயே சென்றுள்ளன.
*      இவ்வுடன்படிக்கைக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமான இன்னொரு அம்சம்; எகிப்தின் தலைமையில் பதாஹ் மற்றும் ஹமாஸ் உறுப்பினர்கள் அடங்கலான ஒரு குழு, பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செயற் படுத்தப்படுவதனை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளமையாகும்.
அத்துடன், இம்முறை பேச்சு வார்த்தைக்கு தலைமை தாங்குவதனை முர்ஸி தலைமையிலான புதிய எகிப்து பொறுப்பேற்பதும் நம்பிக்கையளிக்கும் ஒரு மாற்றம். ஏனென்றால், இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, ஹூஸ்னி முபாரக் தலைமையிலான எகிப்து, அமெரிக்கா என்பன மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பதாஹ்விற்கு சார்பாகவே நின்றன. ஆனால் இம்முறை பேச்சு வார்த்தைகளின்போது பழைய  பக்கசார்பான காட்சிகள் மீட்டப்படும் நிலை தவிர்க்கப்படலாம் என்பது உறுதியாக சொல்லக் கூடியாதாக இருக்கின்றமை.
*      அடுத்ததாக, பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியில் பதாஹ் ஹமாஸைப் பற்றியோ அல்லது ஹமாஸ் பதாஹ்வைப் பற்றியோ எதிர்மறை ஊடக அறிக்கைகள் விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதற்கு பரஸ்பர எதிர்மறை ஊடக அறிக்கைகளும் காரணமாக இருந்தன. இதனால் இம்முறை கலந்துரையாடல்களுக்கான நிபந்தனைகளில், ஊடக அறிக்கைகளை தவிர்ப்பது சீரியஸாக அவதானிக்கப்படும் என எகிப்து தெளிவாகவே தெரிவித்துள்ளமை நோக்கத்தக்கது.
*      இதுவரை இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் பல முக்கியமான அம்சங்களில் இரு சாராருக்கும் மத்தியில் நியாயமான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளமை பேச்சு வார்த்தைகளின்  வெற்றியை எதிர்வு கூறும் மிக முக்கியமான அம்சமாகும். உதாரணமாக,  ஒரு பொதுத் தேர்தலின் பின்னர், கூட்டரசாங்கம் ஒன்றிற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதனையே அப்பாஸ் தலைமையிலான பதாஹ் வலியுறுத்தி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் சிலபோது பதாஹ்விற்கு எதிராகவோ அல்லது ஹமாஸூக்கு எதிராகவோ அமைந்தால், அது பேச்சுவார்த்தையின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதனால் ஹமாஸ் அதனை கடுமையாக எதிர்த்தது. என்றாலும், இம்முறை பதாஹ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தேர்தலுக்கு முன்னரே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்வந்துள்ளமை சாதகமான அம்சமாகும்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: