Facebook Twitter RSS

ஹிஜ்ரி 1342, ரஜப் 28-ல் என்ன நடந்தது?

முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாஃபா இஸ்தான்புல் நகரில் முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 (கி.பி.1924, மார்ச் 3) ல் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடுகடத்தப்பட்டார். முஸ்லிம்களின் தலைமை அழிக்கப்பட்டதன் காரணமாக முஸ்லிம் உம்மா அநாதையாக்கப்பட்டதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும் என்ற இழிநிலையும் உருவானது. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்துகொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24 ல் லாஸானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறியவேண்டும். கிலாஃபத்தை வீழ்த்துவதில் வெற்றி பெற்றதைப்போல உணர்வுப்பூர்வமாகவோ, பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம். அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது. ஏனெனில் அதன் உயிரோட்டமான சக்தியான கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம்.”
கிலாஃபத்தை முழுமையாக அழிப்பதற்கு பிரிட்டன் முழு வீச்சில் செயல்பட்டதை அன்று உலகமே அறிந்திருந்தது. கிலாஃபத்தை அழித்ததோடு மேற்குலகு ஆதிக்கவாதிகள் முஸ்லிம்களின் நிலப்பகுதிகளை துண்டாடி அவர்களின் ஒற்றுமையை சிதைத்தனர். ஒரே உம்மத்தாக விளங்கிய முஸ்லிம்கள் மீது காலனியாதிக்க காஃபிர்களால் தேசியவாதம் என்ற இஸ்லாத்திற்கு மாற்றமான சிந்தனை திணிக்கப்பட்டு பல நாடுகளாக கூறு போடப்பட்டார்கள். முஸ்லிம் உம்மா மீது இஸ்லாத்திற்கு விரோதமான மக்களாட்சி முறையை ஏற்படுத்தி, அவர்கள் மீது ஜனநாயக கொடுங்கோலர்களையும் சர்வாதிகாரிகளையும் ஏற்படுத்தினர்.
நபி (ஸல்) அவர்களால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறவப்பட்டதிலிருந்து நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலம் முதல் உதுமானிய பேரரசு ரஜப் 28 ஹிஜ்ரி 1342 (1924ம் ஆண்டு மார்ச் 3 ) முஸ்தஃபா கமால் அதா துர்க்கினால் வீழ்த்தப்படும் காலம் வரை கிலாஃபா இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. உண்மையில் இஸ்லாம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாத்தின் எதிரிகளும் தோன்றிவிட்டார்கள். முஸ்லிம்களுடன் நீண்டகாலம் போராடி தோல்வி கண்ட காஃபிர்கள் இனிமேலும் போராடி வெற்றிக்கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே அவர்கள் சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தினால் மட்டுமே முஸ்லிம்களை வீழ்த்த முடியும் என்பதாக உணர்ந்தார்கள்.
முஸ்லிம்களின் சிந்தனையை பலவீனப்படுத்த, கிலாஃபத்தின் இறுதிகாலகட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான தேசியவாதம், விடுதலை போன்ற குஃப்ர் சிந்தனைகளை முஸ்லிம்கள் மத்தியில் அதிகளவில் பிரச்சாரம் செய்து இஸ்லாமிய சிந்தனையை ஆட்டங்காண வைப்பதன் மூலம் கிலாஃபத்தைத் தகர்த்துவிடும் முயற்சியில் இறங்கினார்கள். இதனை அடைவதற்காக கிலாஃபா ஆட்சியினுள் அவர்கள் மிஷனரிகளை அனுப்பி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பதன் ஊடாகவும், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதின் ஊடாகவும் தமது கருத்துக்களை விதைத்ததுடன் சில இரகசிய நிறுவனங்களையும் அமைத்தனர். அவர்கள் சமூகத்தில் பலதரப்பட்ட மட்டத்தில் உள்ளவர்களுக்கள் ஊடுருவினர். இதற்காக கல்வி நிறுவனங்களில் தமது கவனத்தை அதிகமாக செலுத்தினர். இத்தகைய முயற்சியின் பலனாக அவர்கள் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அறிவுஜீவிகளைக் கவர்ந்தனர். கிலாஃபத்தின் பகுதியில் ஊடுருவி அதை பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களால் வெற்றிபெற முடியும் என்பதால், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு தேசியவாதத்தையும், துருக்கிய தேசியவாதத்தையும் விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் உணராத நிலையிலேயே கிலாஃபத்தின் அழிவும் நடந்தேறியது. முஸ்தஃபா கமால் அத்தாதுர்க் என்ற இங்கிலாந்தின் அடிவருடி மூலம் அதிகாரப்பூர்வமாக கிலாஃபா அழிக்கப்பட்ட உடனேயே முஸ்லிம் உம்மத்தின் வாழ்வியலிலிருந்து இஸ்லாம் பிரிக்கப்பட்டு, முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய பூமி பல தேசங்களாக பிளவு படுத்தப்பட்ட நிலையில் முஸ்லிம்களை நோக்கிய குஃபார்களின் பிடி வலுவடைந்தது. எனவே மேற்குலகு தமக்கு அடிவருடிகளாக விளங்கிய முஸ்லிம்களை அங்கு ஆட்சியாளர்களாக ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்கின்ற முயற்சியில் வெற்றி கண்டனர். மேற்குலக எஜமானர்களின் பொருத்தத்தை அடைவதற்காக முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த உம்மத்தை பலவந்தமாக ஒடுக்கினர். அவர்கள் கிலாஃபத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபடுபவர்களையும் கடுமையாக ஒடுக்கிவருகின்றனர்.
மேற்குலகின் ஏஜன்டுகளான முஸ்லிம் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் பங்கம் ஏற்பட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர், செச்சன்யா, கிழக்கு துர்கிஸ்தான் என்ற உலகின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்கள் வேட்டையாடப்படுகிறார்கள். முஸ்லிம் உலகு எல்லா நிலைகளிலும் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. முஸ்லிம் உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தொடர்ந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். முஸ்லிம் நாடுகளில் இன்று நடைபெற்று வரும் எழுச்சிமிகு போராட்டங்கள் கிலாஃபத்திற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது.
முஸ்லிம்களே !
உலக அரங்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசாக விளங்கிய இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் மீள் வருகையே முஸ்லிம்களின் பிரச்சினைளுக்கான ஒரே தீர்வு என்பதை சிந்திக்க வேண்டாமா? இந்த ஆட்சிமுறையின் கீழ்தான் சுமார் 1300 ஆண்டுகள் முஸ்லிம் உம்மா தனது விவகாரங்களை தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது. கிலாஃபத்தின் மூலமாக இஸ்லாமிய ஆட்சிமுறை அன்றாட வாழ்வியல் விவகாரங்களில் பரிபூரணமாக அமல்படுத்துவதன் மூலமாகவே, முதலாளித்துவ ஆட்சிமுறையின் கொடுமையை அனுபவித்து வரும் மனிதகுலத்திற்கு விடிவு ஏற்படும். முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.
(அந்நிஸா:141)
விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(ஆல இம்ரான்: 28)
முஸ்லிம்களே !
இஸ்லாமிய ஆட்சிமுறையான கிலாஃபா முஸ்லிம்களுக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் நற்பலன் அளிக்கக்கூடியது. கிலாஃபத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கட்டிக்காக்கப்படும். கிலாஃபாத்தை நிலைநாட்டுதல் என்பது முஸ்லிம்களின் ஜீவாதாரப்பிரச்சனையாக இருப்பதோடு கட்டாயக்கடமையாகவும் இருக்கிறது.
“நபி (ஸல்) அவர்கள் கஃபாவை சுற்றி வரும்போது அதனைப் பார்த்துக் கூறினார்கள்: உனது (கஃபா) சிறப்பு எத்தகையது! உனது (கஃபா) நறுமணமும், புனிதமும் எத்தகையது! ஆனால் எவனுடைய கரத்தில் இந்த முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு விசுவாசியின் ஒரு துளி இரத்தமும், அவனது உடமைகளும் அல்லாஹ்வின் முன்னிலையில் உன்னை (கஃபா) விட புனிதமாகும். நல்லதைக்கொண்டல்லாமல் ஒரு விசுவாசியை கருத வேண்டாம்.”
(அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி, இப்னு மாஜா)
முஸ்லிம்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில், சர்வசாதாரணமாக இன்று முஸ்லிம்களின் கண்ணியமும் பாழ்படுத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள். குர்ஆனை எரிக்கும் போராட்டத்தை அமெரிக்காவில் கயவன் ஒருவன் நடத்தி இருக்கிறான். முஸ்லிம் உம்மத்தை கேடயமாக நின்று பாதுகாக்ககூடிய பொறுப்பு மிக்க இமாம் (கலீஃபா) இல்லாததே முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின்னர் இந்த உம்மத்தை யார் வழி நடத்தவேண்டும் என்பதை தெளிவாகவே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.
“நான் அபூஹூரைராவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் அடிக்கடி கூறிய நபி (ஸல்) அவர்களின் கூற்று: பனி இஸ்ராயில் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தனர். ஒரு நபியின் மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் தோன்றினர். ஆனால் எனது மறைவிற்குப்பின்னர் வேறு நபிமார்கள் யாரும் வரமாட்டார்கள். அதிக எண்ணிக்கையில் கலீஃபாக்கள் தோன்றுவார்கள். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதலாமவருக்கு பைஆ செய்யுங்கள், பின்னர் அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் பைஆ செய்யுங்கள். அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் குறித்து விசாரணை செய்வான்.” என்றார்கள்.
(அபுஹாசிம் (ரலி), முஸ்லிம்)
முஸ்லிம்களே !
நம் தோள்களிலே சுமத்தப்பட்டிருக்கும் இந்த மாபெரும் பொருப்பை நிறைவேற்ற வீறு கொண்டு எழ வேண்டாமா? நாம் உறுதிப் பிரமாணம் கொண்டு ஏற்று வாங்கிய மாபெரும் அமானிதத்தை நாம் மட்டும் சுமந்துக்கொண்டிருந்தால் போதுமா? அதன் பிரகாசத்தை அழைப்புப்பணி மூலம் உலகம் முழுவதும் பரப்ப இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபா அவசியமல்லவா? முஸ்லிம்களின் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து பிரிக்கப்பட்ட இஸ்லாம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டாமா? முஸ்லிம்கள் மாத்திரமின்றி முழு மனித சமுதாயமும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நிம்மதியாக வாழ நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? கடந்த நூற்றாண்டிலும் தற்போதும் மனித சமுதாயம் சந்தித்துள்ள மாபெறும் அழிவுகளுக்கு காரணமான மனித அறிவிலிருந்து தோன்றிய முதலாளித்துவம் என்ற சித்தாந்தம் முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை அடியோடு அகற்றி மீண்டும் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டாமா?
முஸ்லிம்களே !
நம் பாதை சுவனத்தின் பாதையாகும். அதன் பாதை இன்னல்கள் நிறைந்தது. அதை அடைந்துத் கொள்வதற்கு மாபெரும் தியாகங்கள் செய்வது அவசியமாகும். ஸஹாபாக்கள் மற்றும் நம் முன்னோர்களின் தியாக உணர்வு நமக்கும் வரவேண்டாமா? அல்லாஹ் நமக்கு வழங்கிய இஸ்லாமிய சட்டங்கள் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்பட, இந்த அழைப்புப் பணியில் ஈடுபடுவோரின் அழைப்பை ஏற்றுக்கொள்வோமா?
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் அழைத்தால் அதற்கு நீங்கள் பதிலளியுங்கள்.”
(அல் அன்பால்: 24)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: