Facebook Twitter RSS


அப்ஸல் குருவுக்கு தூக்கு அல்ல – நீதிக்கு தூக்கு!




ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்! ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது! என்பது நீதியின் தர்மம்! ஆனால், ஆயிரங்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் பொழுது அப்பாவிகள் தொடர்ந்து தண்டிக்கப்படுகின்றார்கள் என்பதன் அண்மை உதாரணம்தான் அப்ஸல் குரு.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் அரசு அளிக்கும் செய்திதான் என்ன? தீவிரவாதத்துடன் எவ்வித சமரசமும் கூடாது என்பதா? சட்டம் தன் கடமையை சரியா நிறைவேற்றும் என்பதா? எனில், இதர சில கேள்விகளுக்கும் நாம் பதில் தேட கடமைப்பட்டுள்ளோம்!
பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத அதிகபட்ச தண்டனைக்குரிய தேசத் துரோகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த தாக்குதல் யாரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. அதேவேளையில் அதிகபட்ச தண்டனை (capital punishment) என்பதை நிர்ணயிக்க நாம் இந்நாட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ள சட்டங்களைத்தான் அளவுகோலாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
அப்ஸல் குரு வழக்கில் பாரபட்சமும்,பழுதுகளும் நிறைந்த விசாரணை நடைபெற்றதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது. அப்ஸல் குரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள்.
போலீஸின் விசாரணை ஊனமான, பலகீனமானது என்று கூறியது வேறு யாருமல்ல! உச்சநீதிமன்றம் தான் கூறியது. பாராளுமன்றத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று போலீஸ் குற்றம் சாட்டிய டெல்லி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானியை உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என கூறி விடுதலைச்செய்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபரான ஷவ்கத்திற்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம்தான் ரத்துச் செய்தது. ஆனால், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை (Total Conscience of the Society) திருப்திப் படுத்த மரணத்தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிச் செய்தது. சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு எதனை அளவுகோலாக உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
அன்று உச்சநீதிமன்றம் கூறிய சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு இன்று சங்க்பரிவாரை திருப்திப்படுத்த அப்ஸல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் விளக்கம் அளித்துள்ளது ஐ.மு அரசு!
குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதனை நீதிமன்ற மீளாய்வுக்கு(judicial review) உட்படுத்தும் அரசியல் சாசன உரிமை அப்ஸல் குருவுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜ்மல் கஸாபுக்கும் இந்த உரிமை மறுக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலுக்கு அநியாயமாக பழி சுமத்தப்பட்டவரை மட்டும் தண்டித்து சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அரசு அவசரம் காட்டியபொழுது, இந்த தேசத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயலும் உண்மையான குற்றவாளிகள் மற்றும் அவர்களது சூழ்ச்சிகளுக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை.
சமூகத்தின் கூட்டு மனசாட்சியை கட்டமைப்பதில் இன்று தேசத்தில் பல்வேறு குண்டுவெடிப்புகளின் மூலம் தீவிரவாதத்தை கட்டியெழுப்பிய ஹிந்துத்துவா சக்திகளின் பங்கு முக்கியமானதாகும். அவர்களின் அரசியல் பிரதிநிதியான பா.ஜ.கவின் வாயை மூட இந்த மரணத் தண்டனையின் மூலம் ஐ.மு அரசு சாதித்திருக்கலாம். அதன் பிரதிபலனை அடுத்த பொதுத் தேர்தலில் ஆதாயமாக மாற்றவும் ஆளுங்கட்சி கருதியிருக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் மரணத்தண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழுப்பப்பட்டு வரும் வேளையில், பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனையை வாபஸ் பெற்றுள்ள சூழலில் உலகின் பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவின் இமேஜை இத்தண்டனை பாதிக்கும்.
கஷ்மீரின் முக்கிய நகரங்களில் கொந்தளித்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர். 1984-ஆம் ஆண்டு மக்பூல் பட்டை தூக்கிலிட்டது கஷ்மீரில் கொந்தளிப்பை உருவாக்கியது. ஒரு தேசம் தனது குடிமக்களிடம் கருணையும், தயவும் காண்பிக்கும் பொழுதே உண்மையில் அந்த தேசம் வலுவானதாக மாறும். அரசியல் லாபம் கருதி அப்பாவி அப்ஸல் குருவை தூக்கிலிடுவதில் அவசரம் காட்டியவர்கள் சட்டத்தின் கடமையை(?) நிறைவேற்றுவதற்கிடையே இதனை மறந்துவிட்டார்கள் போலும்!
-நன்றி செய்யது அலீ

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: